5709. என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
இன்னஉல கினர்அறியார் ஆதலினால் மலவே
இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
தன்நிகர்தான் ஆம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
உரை: மாதே! எனக்கு மணமாலை அணிந்தவரும், என் உயிரில் கலந்து கொண்டவரும், எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தருமாகிய சிவபெருமான் எனக்கு அறிவித்த உண்மைகளை இவ்வுலகத்தினர்கள் அறிய மாட்டாராதலால் என்னைப் பற்றிப் பல கூறுகின்றார்கள்; கூறுவார் கூறுக; நம் தலைவராகிய அப்பெருமான் நம்பால் வந்தருளும் காலம் நிலைத்த காலைப் பொழுதிலாகும்: அதனால் நீ விரைந்து நமது மாளிகையைத் தூய்மை செய்து மங்கலப் பொருளைக் கொண்டு அலங்காரம் செய்க; அறிவு மயங்கி நான் சொல்வதில் சந்தேகம் கொள்ளற்க; தனக்குத் தானே ஒப்பாகிய அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற அவருடைய ஆணை மொழியாதலால் நான் சொல்லும் இது முக்காலும் சத்தியமாம். எ.று.
தனக்கு அருள் ஞானம் உணர்த்தியதை “மாலை யிட்டார்” என்று தலைவி கூறுகின்றாள். உயிரோடு ஒன்றாயும் வேறாயும் கலந்திருத்தல் சிவனுக்கு இயல்பாதலால், “என் உயிரிற் கலந்தார்” என்று உரைக்கின்றாள். அறிவித்தது - உபதேசித்தருளியது. இவ்வுலகினர் என்பது இன்ன உலகினர் என வந்தது. உண்மை யறியாமல் பலரும் பல பேசுவதை எடுத்தோதுகின்றாளதலால், “பலவே இயம்புகின்றார் இயம்புக” என்று கூறுகின்றாள். மன்னுதல் - நிலைபெறுதல். ஒப்பற்ற ஞான சபையைத் “தன்னிகர்தான் ஆம் பொது” என்று குறிக்கின்றாள். (6)
|