5711. ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
உரை: மாதே! எல்லாம் செயல் வல்ல சிவபெருமான் என்னுடைய உள்ளத்தின் உள்ளே இருந்து உபதேசித்தருளிய உண்மையைத் திருமால், பிரமன் முதலியோர்களும் மண்ணுலகில் உள்ள மக்களும் அறியார் எனின், வேறு யாவர்தாம் அறிவர்; ஒருவருமில்லை. அங்ஙனமிருக்க, நமக்கு அயல் மகளிராய் உள்ள பலர் சொல்வது கேட்டு ஒப்பற்ற தோழியாகிய நீ வருத்தமெய்தி மனத்தில் சந்தேகம் கொள்ள வேண்டா; அவர் நம்பால் வந்தருளும் காலைப் பொழுதும் இதுவாகும்; நீ நேரே நமது மாளிகைக்குச் சென்று விரைந்து அதனை அழகுறத் தூய்மை செய்து உள்ளன்போடு மனமகிழ்ச்சியுடன் நெடிது அலங்கரிப்பாயாக; இவ்வுலகில் எனக்கு ஆதாரமான ஞான நடனத்தைச் செய்கின்ற நடராசப் பெருமானுடைய மெய்யான ஆணை மொழியாதலால் இதனை முக்காலும் சத்தியமாகக் கொண்டு செய்க. எ.று.
சிவபெருமான் உபதேசித்தருளுவ யாவையும் உண்மை மொழிகள் என்பதை வற்புறுத்த, “என்னுள்ளே அறிவித்த உன்னை” என்று உரைக்கின்றாள். தலைவிக்கு அயலாரும் மகளிராதலால் அவர்களை, “அயல்” என்று ஓதுகின்றாள். பையுள் - வருத்தம். பிறரை ஏவாமல் நீயே நேரிற் சென்று அலங்கரிப்பாயாக என்பாளாய், “நேருற நீ விரைந்து விரைந்து அணி பெற மாளிகையை நீட அலங்கரிப்பாய்” என்றும், அதனை உள்ளன்போடு செய்தல் வேண்டும் என்றற்கு, “நேயமொடு களித்து”என்றும் இயம்புகின்றாள்.
தாரகம் - ஆதாரம். (8)
|