5717.

     இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
          யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
     எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
          எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
     பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
          பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
     விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
          விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.

உரை:

     தோழி! விரும்பிய பொருள்கள் எல்லாவற்றையும் அளிக்கவல்ல தலைவராகிய சிவபெருமான் என்னை ஞான மணம் செய்து கொண்டாராதலால் யான் செய்த உயரிய தவத்தை யாவர் செய்தாராவர்; நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; புண்ணியமுடைய உயர்ந்தோர்களை எண்ணும் மனத்தைக்கொண்டு எந்தச் சமயத்தைச் சேர்ந்த தேவர்களாயினும் அவர்களைச் சிறு துரும்பு என்றேனும் நான் எண்ணமாட்டேன்; நான் பித்தேறியவள் என்று நீ நினைத்தாலும் நினைத்துக் கொள்க; நான் தலைவராகிய அவரைப் பிரிய மாட்டேன்; பிரிவு என்று வாயால் சொன்னாலும் நான் சகிக்க மாட்டேன்; ஏனெனில் நான் அவருடைய ஞான நடனத்தைக் கண்டு கொண்டேன்; அதனைக் கண்டால் பேயும் வேரைப் பிரிய நினையாது என்று சொல்லுவார்கள் எனில் யான் உரைப்பது என்னவாம். எ.று.

     இச்சித்த எல்லாம் என்பது இச்சை எலாம் என வந்தது. பெரிய புண்ணியம் செய்து உயர்ந்தோரை நினைத்துப் பயின்ற மனம் வேறு எவரைக் காணினும் உயர்வாகவே கருதும் என்பாளாய், “புண்ணியரை எண்ணு மனத்தாலே எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ” என்று கூறுகின்றாள். சமயத் தலைவர்களைத் தேவர் என்று கூறும் மரபு பற்றி, “எச்சமயத் தேவரையும்” என்று இயம்புகின்றாள். சிறுதுரும்பு என்பது சில்துரும் பென்றாகிச் சிற்றுரும்பு என வந்தது. பிச்சி - பித்துக் கொண்டவள். பிரிவு என்ற சொல்லைக் கேட்கினும் பொறுக்க மாட்டேன் என்பாள். “பிரிவென்று பேசுகினும் தரியேன்” என்று கூறுகின்றாள். விச்சை - ஞானம். பேய்கள் விரும்பிச் சூழ்ந்திருக்க நடம் புரிபவராதலால், “நடம் கண்டால் பேயும் விடத் துணியாது என்பர்கள்” என உரைக்கின்றாள். விளைவு - பயன்.

     (4)