5718.

     வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
          மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
     எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
          எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
     அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
          ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
     பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
          பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.

உரை:

     தோழி! வஞ்சனையில்லாத தலைவராகிய சிவனுக்கு என்னுடைய ஞான மணமாலையை அன்போடு அணிந்து பரவினேன்; அதனால் வேதங்களும் ஆகமங்களும் தெளிவாகப் பகுத்தறிந்து சொல்லுகின்ற குறையாத பெருவாழ்வுகள் யாவும் என்னுடைய வாழ்வே ஆயின; நான் செய்த தவம் புல்லிதாகுமோ? நீயே அறிந்து சிறிது சொல்லுவாயாக; யான் அஞ்சி வருந்துமாறு முகம் கடுத்து நோக்கிய என் தாய்மார்கள் பலரும் எனக்குக் குளிர்ந்து இனிய முகம் காட்டிச் சிறப்பிக்கின்றார்கள்; செம்பஞ்சூட்டிய பெண்கள் எல்லாரும் என்னுடைய காலடியில் பக்கல் இருந்து என்னுடைய நட்பை மிகவும் விரும்பி என்னைப் போற்றுகின்றார்கள். எ.று.

     வஞ்சித்தல் முதலிய தீச்செயல்கள் இல்லாத தலைவர் எனச் சிறப்பித்தற்கு, “வஞ்சமிலாத் தலைவர்” எனப் புகழ்கின்றாள். வேதங்களும் ஆகமங்களும் வேறு வேறு தேவர்களைக் காட்டி அவர்கள் ஓதுகின்ற வாழ்வு வகைகள் யாவையும் தனக்கு உரியவாயின என்பாளாய், “எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே” என இயம்புகிறாள். எஞ்சலுறா வாழ்வு - குறையாத பெருவாழ்வு. எற்றோ - சிறிதோ; அஞ்சு முகம் - கடுத்து நோக்குகின்ற முகம். ஆறுமுகம் - தெளிந்த குளிர்ந்த இனிய முகங்கள். வீறு படைத்தல் - சிறப்பு செய்தல். செல்வ மகளிர் தமது திருவடியில் செம்பஞ்சு ஊட்டி அணிந்து கொள்வது பற்றி அவர்களை, “பஞ்சடிப் பாவையர்” என்று பகர்கின்றாள். விஞ்சடி - உயர்ந்த திருவடி

     (5)