5719.

     அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
          அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
     உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
          ஒருதலைமைப் பெருந்தலைவர் உடையஅருட் புகழாம்
     இன்னமுதில் என்னுடையஅன் பென்னும்நறுங் கனியின்
          இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
     கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
          களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.

உரை:

     தோழி! உணவு கொள்ளுமாறு என்னை இங்கே அழைக்கின்றார்; நானோ அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானுடைய திருவடியாகிய மலரின்கண் ஊறுகின்ற ஞானத் தேனை உன்னை நினைத்துக் கொண்டே உண்டு மகிழ்ந்தேன்; என் உள்ளத்தில் எழுந்தருளுகின்ற ஒப்பற்ற பெருந் தலைவராகிய சிவனுடைய அருள் நிறைந்த புகழாகிய இனிய அமுதத்தில் என்னுடைய அன்பு எனப்படும் இனிய கனியின்கண் பெருகும் இரதத்தையும் என்னுடைய ஒப்பற்ற கணவராகிய அவருடைய திருவுரு எனப்படும் கரும்பின் உள்ளிருந்து தனிப்பட எடுத்த இனிய பாகும் ஒன்றாய்க் கலந்து உண்டு மகிழ்ந்தேன்; ஆதலால் என் உள்ளத்தில் பசி சிறிதுமின்றிப் போய்விட்டது காண். எ.று.

     அன்னம் - உணவு. இறைவனுடைய திருவடி சிந்திக்குந்தோறும் தேன் சுரக்கும் சிறப்புடையதாதலால், “அண்ணல் அடி மலர்த்தேன்” என்று உரைக்கின்றாள். திருவடித் தேனைப் பருகும் பொழுது தனது தோழியையும் மறவாமை புலப்படுத்தற்கு, “உன்னை நினைத்து உண்டேன்” என்று ஓதுகின்றாள். ஒரு தலைமைப் பெருந் தலைவர் - ஒப்பற்ற தலைமைச் சிறப்புடைய பெரிய தலைவராகிய சிவ பெருமான். அவருடைய புகழை அமுதாகவும் அவர்பால் தமக்குள்ள அன்பை இனிய கனியின் ரசமாகவும் அவருடைய திருவுருவைக் கன்னல் தேம்பாகாகவும் புனைந்து கூறுகின்றாளாதலால், “இன்னமுதில் நறுங் கனியின் இரதமும்” என்றும், கரும்பின் உள்ளிருந்து எடுத்த தேம்பாகு கலந்து மகிழ்ந்து உண்டதினால் பசி சிறிதுமில்லை என்பாளாய், “களித்துண்டேன் உள்ளகத்தே பசி சிறிதும் கண்டிலன்” என்றும் பகர்கின்றாள்.

     (6)