5720.

     பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
          புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
     இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
          எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
     சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
          சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
     துதிபெறும்அத் திருவாளர் புன்கையை நினைக்குந்
          தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.

உரை:

     தோழி! அம்பலத்தில் நடம் புரிகின்ற பெருமானாகிய சிவனுடைய திருமுகத்தின்கண் தளதள வென்று ஒளி செய்யும் குறுமுறுவல் நகையே ஒரு கோடி அளவான பொன்னின் மதிப்பு பெறும் என்று உரைப்பார்கள்; இஃது ஒரு அளவோ; பல கோடி என்றாலும் அஃது ஒரு மதிப்பாகாது; எல்லை கடந்த அண்ட வகைகள் எத்தனை கோடிகள் உண்டோ அவையும், நால்வகை வேதங்களும் சொல்லுகின்ற அண்ட வகைகள் எத்தனையோ அத்தனையும், நடத்துகின்ற சத்திமான்களும் சத்திகளும் ஒருசேரத் தொகுத்து நோக்கினால் எத்தகைய மதிப்பு உண்டாகுமோ அத்தனையும் சான்றோர்களால் துதிக்கப்படுகின்ற அத்தெய்வத் திருவாளராகிய சிவனுடைய புன்னகையை நினைக்கும் போதெல்லாம் என் மனத்தில் சுரக்கின்ற சுக வுருவான அமுதத்தை ஒப்பாகக் கூறலாம். எ.று.

     பொது - அம்பலம். துரை - தலைவர். புன்னகை - முறுவல் நகை; புன்சிரிப்பு என்றும் புகல்வர். வரை - அளவு. எண்ணிறந்த அண்டவகை - எண்ணி எல்லை காண முடியாத அண்டங்களின் வகைகள். சதுர் மறை என்பது சதுமறை என வந்தது. சத்திகளை யுடைய தேவர்களைச் சத்தர்கள் என்று தெரிவிக்கின்றாள். இதனால், சிவனுடைய புன்சிரிப்பு இன்ப மயமான ஞான அமுதத்தை, நல்குவது உரைக்கப்பட்டது.

     (7)