5721. கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
உரை: தோழி! கண் வழியாக என் மனத்துட் புகுந்து தலைவராகிய சிவபெருமான் என்னுட் கலந்து கொண்ட பொழுது யான் என்னையும் என்னுடைய மனம் முதலிய் கரணங்களையும் சேரக் கலந்து கொண்ட சுகானத்தம் யாவும் அப்பெருமான் அருளிய சிவபோகத்தில் ஒரு சிறிய அளவின்றி வேதங்கள் உரைக்கின்ற அளவு இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்; தேவர் உலகம் எங்கும் பரந்திருக்கின்ற அருட் செல்வராகிய அப்பெருமான் என் உயிரிற் கலந்து கொண்ட பொழுது வினைகளால் உண்டாகும் துன்பம் நீங்கி தான் பெற்ற சுகத்தை நினைக்கும் பொழுதெல்லாம் என் உள்ளத்தில் நிறைந்து கொண்ட சிவானந்தப் பெரும் போகம் தோன்றி என்னுள் பரந்த என்னை இன்ப மயமாய்த் தானாக்கிக் கொண்டது காண். எ.று.
கண் கலந்த கணவர் - கண் வழியாகக் கருத்தில் நிறைந்து கொண்ட கணவர்; கண்ணுக்கு இனிமையுறக் காட்சி தந்த கணவர் என்றலும் ஒன்று. கைகலத்தல் - வேறறக் கூடிக் கொள்ளுதல். அப்பெருமான் தன்னைக் கலந்து நின்ற பொழுது தானும் தன்னுடைய கருவி கரணங்களும் கரைந்து சிவமாயினமை புலப்பட, “என்னையும் என் கரணங்கள் தனையும் கலந்த போகமெலாம் சிவபோகம்” எனச் செப்புகின்றாள். சிவ போகத்தின் பெருமையை நோக்கத் தான் பெற்ற சிவபோகம் மிகமிகச் சிறியது என்பாளாய், “சிவ போக தனில் ஓர் இறையளவு என்று உரைக்கின்ற மறையளவு இன்று அறிந்தேன்” என உரைக்கின்றாள். சீவகர்கள் பெறும் சிவபோகம் பரசிவ போகத்தில் இறையளவு என்று வேதங்கள் உரைக்கின்றன என்பது கருத்து. பெறப்படுகின்ற சிவ போகம் வினை மாசு கழிந்தவிடத்து உள்ளத்தில் பெருகி நிறையும் சிவானந்தம் என்பது தெளிய, “வினைத் துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடுந் தோறும் எல்லாம் உண் கலந்த ஆனந்தப் பெரும் போகம்” என்று உரைக்கின்றாள். அஃது வேதம் உரைக்கும் அளவில் சிறியதாயினும் அஃது என்னைச் சிவமயம் ஆக்குவதாயிற்று என்பாளாய், “எனை விழுங்கக் கற்றது காண்” என்று விளம்புகின்றாள். எண் கலந்த போகம் - எண்ணத்தின் எல்லை யளவும் கலந்து நிற்கின்ற போகம். உள்கலந்த என்பது எதுகை நோக்கி உண் கலந்த என வந்தது. (8)
|