5722. மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும் நான் அறியேன்
தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
உரை: இதழ் விரிந்த பூக்களால் ஆகிய மாலை அணிந்த கூந்தலை உடைய தோழி! நம்முடைய மாடத்தின்கண் அமைந்த நிலாமுற்றத்தில் என்னோடு உடனிருந்து ஞான மணவாளராகிய சிவ பெருமான் எனக்குத் திருவருளாகிய ஞான அமுதத்தை மனமுவந்து கொடுக்க நான் உண்ட பொழுதில் என்னையும் மறந்தேன்; என்னைச் சூழ உள்ள உலகத்தையும் மறந்தேன்; தேடிப் பெறுதற்கரிய இனிய பாலும் கரும்பின் பாகும் நெய்யும் தூய தேனும் கலந்தது என்று சொன்னாலும் அவ்வமுதத்துக்கு நிகராகாது; ஒப்பு சொல்ல முடியாத அதன் சுவையை என்னால் உரைக்க முடியாது; அவ்வமுதத்திற்கு அவரது திருவடி அமுதம்தான் ஒப்பாம் என உணர்க. எ.று.
நிலா மண்டபம் - மாடத்தின்கண் அமைக்கப்படும் நிலா முற்றம். ஞான மணம் புரிந்து கொண்டவராதலால் சிவனை, “ஞான மணவாளர்” என உரைக்கின்றாள். உலகியலில் கணவர் மனைவியர் இருந்து இனிய பாலமுதம் உண்பது மரபாதலால் அக்குறிப்பு விளங்க, “மணவாளர் கொடுத்த திருவருள் அமுதம்” என்று குறிக்கின்றாள். உலகியலில் பாலமுதத்தைத் கணவருக்கு மனைவியாவாள் தருவது மரபாக இங்கே ஞான அமுதத்தை இறைவன் தருவது விளங்க, “மணவாளர் கொடுத்த திருவருள் அமுதம்” என்று செப்புகின்றாள். ஞான அமுது உண்டமையால் தலைவி தன்னையும் உலகியற் சூழலையும் மறந்தமை புலப்பட, “என்னை அறிந்திலன் உலகம் தன்னையும் நான் அறியேன்” என்று கூறுகின்றாள். சாலாது - பொருந்தாது. ஈடு - ஒப்பு. அவர் தந்த அமுதம் வேறு அவரது திருவடி ஞானம் வேறு என்பதற்கில்லை என்பாளாய், “அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே” எனப்புகல்கின்றாள். (9)
|