5723.

     கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
          கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
     இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
          இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
     பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
          புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
     நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
          நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.

உரை:

     தோழி! என்னுடைய உடம்பு கற்பூரத்தின் மணம் கமழ்கின்றது; அதுவும் கணவராகிய சிவனுடைய திருமேனியில் கலந்திருக்கும் மணமாகும்; அந்த மணம் தானும் இவ்வுலகியற் பூதப்பொருள்களின் மணம் போலச் சிறிது போதில் மறைந்து ஒழிவதன்று; அஃது அவர் மேனியின் இயற்கை மணமாகும்; அது அவருடைய துரியத்தானத்தில் நிறைகின்ற இறைமை வடிவத்தில் உள்ளதாகும்; பொன்னால் இயன்று பூவும் அதற்கென நறுமணமும் உலக மக்கள் கண்டதில்லை; அது புண்ணியமூர்த்தியாகிய சிவனுடைய அழகிய வடிவில் அமைந்தனவாகும்; நல்ல திருநீறு அணிந்த அவருடைய அழகிய வடிவமுற்றும் நான் கண்டு கூடினேன்; அதன் பயனாக நான் அதுவாயினேன். எ.று.

     என்மேல் கமழும் கற்பூர மணம் அவரைக் கூடினமையால் என் மேனியில் எய்தியது என்பாள், “கணவர் திருமேனியிலே கலந்த மணம்” என்று கூறுகின்றாள். இவ்வுலகியற் பூதப் பொருட்களில் உண்டாகும் மணம் போல்வதன்று; அஃது அவர்க்கு இயல்பாகவுள்ள இயற்கை மணம் என்பாளாய், “இற்பூத மணம் போல மறைவதன்று இயற்கை மணம்” என வலியுறுத்துகின்றாள். இறைவன் உயிர்களின் துரியத்தானத்தில் இறைமை வடிவத்தோடு எழுந்தருளும் போது அந்த வடிவத்தில் அமைவது என்றற்கு, “துரிய நிறை இறை வடிவத்து உளது” என மொழிகின்றாள். இப்பூத மணம் என்பது எதுகை நோக்கி இற்பூத மணம் என வந்தது. பொன்னால் செய்யப்பட்ட பூவுக்கு நறுமணம் ஊட்டி அஃது இனிது கமழக் கண்டவர் உலகத்தில் இல்லையாதலால், “பொற் பூவும் திருமணமும் கண்டறியார் உலகர்” என்று கட்டுரைக்கின்றாள். பொன்னால் இயன்ற பூவும் அதற்கெனச் சிறந்த மணமும் ஒருங்கு அமைந்தது போலப் பொன் மேனியும் தெய்வ நறுமணமும் சிவனுடைய திருமேனியில் காணலாம் என்பாளாய், “புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவே” என்று நவில்கின்றாள். நற்பூதி அணிந்த திருவடிவு - தூய வெண்மையான திருநீறு பூசப்பட்ட சிவ வடிவு. சிவன் திருமேனியைக் கூத்தான் பொன் வண்ணமும் கற்பூர மணமும் பெற்றமை விளங்க, “நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அதுவானேன்” என்று தலைவி தோழிக்கு உரைக்கின்றாள். துரியத்தானமாவது சுழுத்திக்குக் கீழ் உள்ள உந்திக் கமலம். யோகிகட்கு அவ்விடத்தே பரம்பொருள் ஞானாகாசமாய்க் காட்சி வழங்கும் என்று பெரியோர்கள் கூறுவதால் அதனைத் “துரியம் நிறை இறைவடிவம்” என்று சுட்டிக்காட்டி அருளுகின்றார். நற்பூதி - வெண்மையான திருநீறு.

     (10)