5724. மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
மின்னும் ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
உரை: தோழி! பெரிய அழகிய ஞான சபையின் நடுவே விளங்குகின்ற திருநடனத்தைச் செய்கின்ற என்னுடைய மணவாளராகிய சிவனுடைய திருமேனியின் அழகு கண்டு மகி.ழ்ந்தேன்; அவருடைய திருமேனி இருந்த இயல்பை நான் எவ்வாறு சொல்லுவேன்? ஒளி விளங்குகின்ற சூரியன் சந்திரன் அக்கினியுடன் மின்னல்களின் கூட்டமும் ஒன்றாய்க் கூடி நினைவு எல்லை கடந்து கோடி ஒளி உடையனவாக விளங்குகின்ற ஒளி நலத்தை என்னவென்று உரைப்பேன்; உரைக்கப் புகுந்தாலும் உரைக்கு அடங்குவதாக இல்லை; அவ்வொளி வண்ணத்தை வேதநூல் முடிவுகளாலும் சொல்ல முடியாது; ஆகவே அந்த அரிய பெரிய சிவசோதியின் வண்ணத்தை யாவரே எடுத்துரைப்பார். எ.று.
மன்னு சபை - பெரிய சபை. மன்னுதல் - ஈண்டுப் பெருமை குறித்து நின்றது. திருச்சபை - ஞான சபை. ஞான ஒளி திகழ்வது பற்றி, “வயங்கு நடம்” என்று சிறப்பிக்கின்றாள். திருமேனி வண்ணம் என்பது சிவனுடைய திருமேனியில் விளங்கும் ஒளி நலத்தைக் குறிக்கின்றது. மதி - சந்திரன். இலங்கும் என்பதை மதி முதலிய மூன்றினோடும் கூட்டுக. சூரியன், சந்திரன், நெருப்பு, வானத்தில் விளங்கும் மின்னுக்கள் ஆகியவை ஒன்று கூடியவிடத்து எழுகின்ற ஒளி எண்ணிறந்த கோடி அளவாக ஒளிகொண்டு விளங்குவதாம் என்பது கருத்து. அவ்வண்ணம் என்பது அன்ன வண்ணம் என வந்தது. வேதாந்த நூல்களும் அவருடைய திருமேனி “பாஸ்கர கோடி துல்யம்” என உரைப்பதோடு அமைந்து ஒழிவதால், “மறை முடிவும் அறை வரிதே” என்று சொல்கின்றார். (11)
|