5725. கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே
கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே
என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்
அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.
உரை: தோழி! என்னைப் பலரும் கள்ளுண்டு களிக்கின்றாள் என்று சொல்லுகின்றார்கள்; நான் அதனைப் பொற் சபையின் நடுவே கண்டதுமுண்டு; ஞான சபையிலே யான் உண்டு மகிழ்ந்ததுமுண்டு; இகழப்படுகின்ற பொறி புலன்களாகிய இந்திரிய விடயங்களில் என்னைக் கீழ்மையுறத் தள்ளுகின்ற கள்ளன்று; எக்காலத்தும் இறந்தொழியாத நிலைத்த இடத்தில் என்னை இருக்க வைக்கும் உயர்நிலைக் கள்ளாகும்; மேலும் அது உலகத்தவர்கள் வயிற்றுக்குள்ளே உண்டபோது மயக்கம் உறுவிக்கும் கள்ளல்ல; உள்ளத்தில் உள்ள மாயா மயக்கங்கள் அனைத்தையும் போக்குகின்ற ஞானக் கள்ளாகும். என்னை நெருங்கி யுள்ள மற்றவர்களும் அடுத்தடுத்து என்னைப் பலமுறையும் காண்பார்களானால் யான் உண்ட அந்தச் சிவபோகமாகிய கள் அவர்களுக்கு இங்கே ஞான விளக்கத்தைத் தரும் என்று அறிவாயாக. எ.று.
என்னுடைய குணஞ் செயல்களைக் கண்டவர்கள் நான் கள்ளுண்டு மயங்கினேன் என உரைக்கின்றார்கள் என்பது கண்டவர் கூற்றைக்கொண்டெடுத்து மொழிவதாகும்; நான் கள்ளுண்டேன் என்பது உண்மையானால் அது பொற் சபையின் நடுவே விளங்குகின்ற சிற்சபையில் எழுந்தருளும் சிவஞான போகமாகிய ஞானக் கள்ளாகும் என்பாள், “கனக சபை நடுவே கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும் உண்டு” என உரைக்கின்றாள். நான் உண்ட கள் உலகியல் மயக்கில் என்னைக் கிடத்திப் பிறந்திறந்து வருத்தும் கீழ்மைத் தன்மையை யுடைய கள்ளன்று என்றும், இறந்தொழியாத சிவானந்த உயர்நிலையில் என்னை வைத்து வாழ்த்தும் பெருமை அமைந்த கள் என்று புகல்வாளாய், “நான் உண்ட கள் எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள்ளன்றே” என்றும், “இறவா நிலையில் இருத்தும் கள்” என்றும் இயம்புகின்றாள். மேலும் அதனை விளக்குவாளாய், நான் உண்ட கள் உலகக் கள் போல உண்டவரை அறிவு மயங்குவிக்கும் கள்ளன்று, அறிவின்கண் படிந்துள்ள மலமாயை கன்மங்களில் மயக்கங்கள் யாவையும் போக்கி விடும் ஞானக் கள்ளாகும் எனத் தெளிவுபடுத்துகின்றாளாதலால், “உலகர் உள்ளுண்டபோது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள்” என உரைக்கின்றாள். மடவாய் - இளமையான பெண்ணே. அள்ளுதல் - நெருங்குதல். இந்த ஞானக் கள் தன்னை உண்டவரை ஞானத் தெளிவு பெறச் செய்வதோடு உண்டவரைக் கண்டாலும் கண்டவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க வல்லதாம் என்பாளாய், “பிறரும் எனை அடுத்தடுத்துக் கண்டால் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள் அறிவு தரும்” என்று மொழிகின்றாள். (12)
|