5726. காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்ததிலை அம்மா.
உரை: தோழியாகிய காரிகையே! பொற் சபையின் நடுவில் நின்று நடம் புரிகின்ற என் கணவராகிய சிவனது சிறந்த அழகைக் காண்பதற்கு என்னோடு வருவாயோ? அழகு குன்றாத அவரது திருவடி அழகை யான் மனத்தாலும் காண முடியாது என்பாயாகின், வாயாற் சொல்ல முடியுமோ? கையால் எழுதத்தான் முடியுமோ? புகழ் குன்றாத வேதங்களோடு ஆகமங்களும் வேறு பிற ஞான நூல்களும் பின்னது முன்னதாகவும் முன்னது பின்னதாகவும் பின்னும் முன்னுமாக மயங்கிப் பெருமை குன்றாது இன்றளவும் மிகவும் எழுதி எழுதிப் பார்க்கின்றதன்றி எழுதி முடித்ததென இதுகாறும் யாரும் பார்த்தது கிடையாது. எ.று.
காரிகை - அழகிய பெண். ஏர் இகவாத் திருவடிவு - அழகு குன்றாத ஞானத் திருவுருவம். ஏர் என்பது எழுச்சி எனினும் பொருந்தும். இயம்பவும் எழுதவும் முடியாது என்பதினால் மனத்தால் எண்ணவும் முடியாது என்பது வருவிக்கப்பட்டது. பேர் இகவா மறைகள் - புகழ் குறையாத வேதங்கள். பிற ஞான நூல்கள் எல்லாம் அடங்க “எல்லாம்” எனப் பொதுப்படக் கூறுகின்றாள். வேதம் முதலிய யாவும் முடியாமல் வீழ்ந்ததற்குக் காரணம் கூறுவாளாய், “பின்னது முன் முன்னது பின் முன்னால் மயங்கி” என்று பேசுகின்றாள். பார் இகவாது என்பதில் பார் என்பது உலகில் நிகழும் பெருமை. சிவ பெருமானுடைய மேனி வடிவழகை வேதாகமங்களும் பிற ஞான நூல்களும் எழுதிப் பார்த்து முடிபு காணமாட்டாமல் திகைக்கின்றன என்பது கருத்து. (13)
|