5728. கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது
கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம்
எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண்
பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால்
பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ
இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே.
உரை: எனது உயிர்த் தோழியே! என்னுடைய கணவராகிய சிவபெருமான் என்பால் எழுந்தருளும் காலம் இதுவாதலால் நாம் அவர்க்குக் கண்ணேறு கழிக்கும் பொருட்டு நீ கற்பூரம் கொண்டு வருவாயாக; என்னுடைய உயிர் நிலை அவனுடைய திருவடியாகிய தாமரையின் கீழ் இருக்கின்றது; கீழ் என்றதினால் கீழ்மைப்பட்டு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்; பலவாகிய பூதத் தத்துவ நிலைகளைக் கடந்து நாத தத்துவ நிலைக்கு அப்பாலதாகிய பரநாத தத்துவ நிலைக்கு மேலதாய் விளங்குகின்றது என அறிவாயாக; இவ்வுலகத்துப் பூக்களைக் கொண்டு அவர் திருவடிக்குக் கண்ணேறு கழிப்போமாயின் அது எவ்வுலகத்திலும் வாழும் எல்லா உயிர்களுக்கும் இனிமை மிக நன்மை விளைவிப்பதாம். எ.று.
பூதப் பரிணாமமாகிய தேகம் உயிர் நிலையாதலால் அதனை, “எற்பூத நிலை” என்று இயம்புகின்றாள். எற்பூத நிலை - என்னுடைய பூத நிலையாகிய தேக உயிர். திருவடிக் கீழ் இருப்பதென்பது கீழ்மையுற்று இருப்பது எனப் பொருள் கொள்ளலாகாதென வற்புறுத்துவாளாய், “கீழ் இருப்பது என்று நினையேல் காண்” என மொழிகின்றாள். பற்பூத நிலை - பலவாகிய பூதங்களை அடியாகக் கொண்ட தத்துவ நிலைகள். தத்துவங்கள் முப்பத்தாறனுள் சுத்த மாயா தத்துவங்களின் உச்சியில் உள்ள நாத தத்துவ நிலையை, “நாத நிலை” என்று நவில்கின்றாள்; நாத தத்துவ நிலைக்கு மேலுள்ளது பரநாத நிலை என அறிக. சிவனது திருவடி அப்பரநாத தத்துவ நிலைக்கும் மேல் விளங்குவது. அதன் கீழ் இருப்பதாவது அபரநாத தத்துவத்திற்கு மேலாய் இருப்பது என்று விளக்குதற்கு, “பரநாத நிலை அதன் மேல் விளங்குகின்றது அறி நீ” என்று கூறுகின்றாள். இவ்வுலகப் பூ என்பது இப்பூ என்றாகி இற்பூ என எதுகை நோக்கித் திரிந்தது. (15)
|