5729. மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே.
தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
உரை: தோழி! நம்முடைய மாளிகைக்குள் புகுந்து பூக்கள் பரப்பிய பள்ளி மேல் இருந்து மணவாளராகிய சிவபெருமான் என்னைக் கூடினபோது, அவருடைய வடிவம் இதுவென்றும் என்னுடைய வடிவம் இதுவென்றும் வேறாக நினைந்து நான் பிரித்தறிந்ததில்லை; என்னையே நான் சிறிதும் அறியேன்; அன்றென்றால் யான் அவரை வேறாகப் பிரித்தெறிவது எங்ஙனம் முடியும்; சிறிதளவுகூட என் உள்ளத்தில் விகற்ப உணர்ச்சி என்பதே என்பால் இல்லா தொழிந்தமையால் அருட் செல்வராகிய அவர் என்னிற் கலந்து கொண்டது நான் சொல்வது எவ்வாறோ? அப்பெருமான் உன்னைக் கூடுகிற பொழுது நான் இதுபற்றி உன்னைக் கேட்பேன்; அப்போது உன்னுடைய அறிவும் என்னுடைய அறிவும் ஒன்றாய்விடும் காண். எ.று.
மனை என்றது தலைவி உறையும் வீடாகும். மலரணை - பூவிதழ்கள் பரப்பிய பள்ளியணை. இருவரும் கூடியவிடத்து வேறறக் கலந்த நிலையை விளக்குவாளாய், “மணவாளர் வடிவென்றும் எனது வடிவென்றும் தனித்தனி நினைந்து பிரித்து அறிந்ததில்லை” என்று உரைக்கின்றாள். விகற்ப உணர்ச்சி - வேறு வேறாக பிரித்துணரும் அறிவு. இருவரும் ஒன்றாய்க் கலந்தவிடத்து உளதாகும் சிவபோகானுபவம் அறிவால் அறியப்படுவதன்றி வாயால் உரைக்கப்படுவதன்று என்ற உண்மையை வற்புறுத்தற்கு, “உனை அனைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் என உணர்க” என்று உரைக்கின்றாள். (16)
|