5730. தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
சூழறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.
உரை: இடையளவும் தாழ்ந்த கூந்தலையுடைய தோழி! ஞான சபைக்குத் தலைவராகிய சிவபெருமான் இவண் வருகின்ற தருணமாதலால், என்னைச் சிறிது நேரம் தனித்திருக்க விடுவாயாக; நான் சிவபோக வாழ்வை அடைவதற் கென்று அமைக்கப்பட்ட பொன் மண்டபத்தில் உள்ள பளிங்குக் கல்லாலாகிய பள்ளியின் மேல் அமைந்த பூக்கள் பரப்பிய படுக்கையை நான் அலங்கரித்து வைக்க வேண்டும்; நினைக்கிறபடி நானே அதனை அலங்கரிக்கின்றேன் என்று தோழியாகிய நீ சொல்லுகின்றாய்; ஆனால் அது தலைவராகிய அவருக்கு விருப்பமில்லை; நான் அதனைப் பலமுறைத் தெளிய அறிந்துள்ளேன்; நான் அவரிடம் பெற்ற சுகம் எழுகடலினும் பெரிதாகையால் இதை விட நான் செய்யக் கடவ திருப்பணி வேறு யாது உளது, நீயே சொல்லுக. எ.று.
தனிக்க விடுதல் - தனித்திருக்குமாறு நீங்குதல். வாழ்வடை பொன்மண்டபம் - சிவயோக போகத்தை நுகரும் இன்ப வாழ்வு பெறுகின்ற பொன் மண்டபம். பொன் வேயப்பட்ட மண்டபம் பளிக்கறை மேல் அமைக்கப்பட்ட பூக்கள் பரப்பிய படுக்கை என்பதற்கு, “பளிக்கறையின் ஊடே மலரணை” என்று மொழிகின்றாள். சூழ்ந்தல் - நினைத்தல். துரை - தலைவர். மனம் - ஈண்டு விருப்பத்தின் மேல் நின்றது. நான் பெற்ற சிவபோக சுகத்துக்குக் கைமாறாக இதனைச் செய்தல் வேண்டும் என்பாளாய், “இங்கு இதைவிட நான் செய்பணி வேறு எப்பணி நீயே சொல்லுக” என இயம்புகின்றாள். இதனால், படுக்கை அலங்கரிக்கும் திருப்பணியை நானே செய்தல் வேண்டும் என்பது குறிப்பு. (17)
|