5731. தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
மனித்தர்களே வானவரோ மலர்அயனோ மாலோ
மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
உரை: தோழி! ஒப்பற்ற தலைவராகிய சிவபெருமான் என்பால் வருகின்ற சமயம் இதுவாதலால் நீ என்னைத் தனித்திருக்க விட்டு நீயும் ஒரு பக்கத்தே தனித்திருப்பாயாக; அப்பொழுது அவருடைய இனிக்கின்ற சுவைப் பொருள் கலந்த இனிய மொழிகளை மனமகிழுமாறு செவியில் கேட்டு உவகை மிகுவாய்; இந்த அளவு உனக்குப் போதுவதாகும்; மனிதர்களோ தேவர்களோ திருமால் பிரமன் முதலிய மற்றைத் தேவ தேவர்களோ மகேசுரர்களோ யாவரும் அவருடைய தனிச் சிறப்புடைய திருமொழியைக் கேட்க விரும்பிக் கோடி காலம் இந்த நவகண்டமாகிய நிலவுலகத்தில் தவஞ் செய்து கொண்டிருக்கிறார்கள்; அங்ஙனமிருக்க நான் யாது புகல்வேன். எ.று.
தனித்தலைவர் - ஒப்பற்ற காதலராகிய சிவபெருமான். தனித்து ஒரு பால் இருத்தி - பிற தோழியரோடு கூடியிராமல் தனியாக இருப்பாயாக. தலைவருடைய சொல்லின் இனிமையைப் புலப்படுத்தற்கு, “இனித்த சுவைத் திரள் கலந்த திருவார்த்தை” என்று சிறப்பிக்கின்றாள்; அவருடைய இனிய மொழியை கேட்பதொன்றே இப்போது உனக்குப் போதும் என்பாளாய், “இது சாலும் நினக்கே” என்று இயம்புகின்றாள். நவஞ் செய்த நிலம் - பூமியின் பிரிவாய் அமைந்துள்ள ஒன்பது கண்டங்கள்; அவை கீழ்ப்பால் விதேகம், மேல்பால் விதேகம், வடபால் விதேகம், தென்பால் விதேகம், வடபால் இதேபதம், தென்பால் இதேபதம், வடபால் பரதம், தென்பால் பரதம், மத்திம கண்டம் என்பன. (18)
|