5732. மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
அணவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
உரை: தோழி! ஞான மணவாளராகிய சிவபெருமான் வருகின்ற காலம் இதுவாகுமாதலால் இளையவளாகிய தோழியே நம்முடைய மாளிகை வாயில்களில் எல்லாம் அழகுற நீ கோலம் செய்வாயாக; உயர்குண மூர்த்தியாகிய அவர் வந்தடையும் மலர் பரப்பிய பள்ளியணை இருக்கும் இடத்தை நானே புகுந்து ஒளி திகழும் மணி விளக்குகளால் அலங்காரம் செய்வேன்; நீங்காத சிவபோகத்தைத் தரும் என்னுடைய ஒப்பற்ற கணவர் வருமிடத்துச் சிறிதும் மயக்கம் பொருந்திய செயல்கள் யாதும் உளதாகக் கூடாது; பொருந்தாத மனமுடையவர்களை மாளிகையின் புறத்துக்குரிய பணிகளையே செய்ய விடுவாயாக; அன்புடைய நன்மக்களுக்கு மாளிகையின் அகத்தே உள்ள பணிகளைச் செய்ய விடுவாயாக. எ.று.
மாளிகை வாயில் என்பது மாளிகை வாயல் என வந்தது. இது எழுதினோர் பிழை போலும். வளம் பெறப் புனைதல் - அழகுறக் கோலம் செய்தல். எல்லா நற்குணங்களையுமே உருவாக உடையவராதலால் சிவனைக் “குணவாளன்” என்று குறிக்கின்றாள். மலரணை அகம் - மலர்கள் பரப்பிய படுக்கை இருக்கும் அறை. குலவுதல் - ஒளி செய்தல். தணவாத சுகம் - பிரிவின்றி நுகரப்படும் பேரின்பம். மயல் வாதனைகள் - மயக்கத்தை உண்டு பண்ணும் தவறான செயல்கள். அணுவுதல் - பொருந்துதல். மாளிகைக்குப் புறத்தே செய்தற்குரிய படிகளைப் புறப்படிகள் என்றும் உள்ளே செய்தற்குரியப் படிகள் அகப்படிகள் என்றும் வகுத்துரைக்கின்றார். (19)
|