5733. அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
உரை: ஆய்ந்த இழைகளை அணிந்த தோழியே! அரிய பொன் போன்றவராகிய என் கணவர் வந்தடைகின்ற காலம் இதுவாதலால் மாளிகை வாயிலின் முகப்பெல்லாம் கண்டோர் விரும்பிப் போற்றுமாறு தோரணங்களாலும் துகிற் கொடிகளாலும் பழுத்த வாழைக் குலைகளாலும் மணம் கமழும் பாக்குக் குலைகளாலும் தென்னையின் இளநீர்க்குலைகளாலும் வேறு பலவற்றாலும் அலங்காரம் செய்க; சிறப்புடைய இடங்களில் கரும்பும் நெல் முளைகளும் நீர் நிறைந்த மீனொடு கூடிய நீர்க் குடங்களாலும் கண்ணாடி கவரி முதலிய பொருள்களாலும் மனத்தால் ஆராய்ந்து வைத்து ஒப்பனை செய்க; இவ்வாறு செய்தால் இரும்பும் கல்லும் போன்ற மனமுடையவர்களும் கண்டவிடத்துக் கனியுமாறு உருக்கும் தலைவருடைய நல்வரவு இனிது எதிர்கொண்டு ஏத்தி வழிபடுதற்குப் பொருந்துவதாம். எ.று.
மாற்றுயர்ந்த பொன் என்பதற்கு, “அரும் பொன்” என உரைக்கின்றாள். தோழியின் செல்வச் சிறப்புணர்த்த “ஆயிழை” என்று போற்றுகின்றாள். வாயில் எனற்பாலது ஈண்டும் வாயல் என வந்தது. கொடிகள் - பல்வகை வண்ணம் தீட்டிய பருத்தி ஆடையால் அமைந்த துகிற் கொடிகள். நெல் முளையும் மங்கலப் பொருளாதலால், “நெல்லின் முளை” கூறப்படுகிறது. இரு பக்கமும் கயல் மீன் எழுதப்பட்ட குடமும் மங்கலப் பொருளாம் என்பது பற்றி, “இணைந்த கயல்” என இயம்புகின்றாள். தலைவரை வரவேற்றற்கும் வழிபடுவதற்கும் இவை உயர்வு தருவன என்பாளாய், “இறைவர் திருவரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிது” என விளம்புகின்றாள். (20)
|