5734. பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழி
பராக்கடையேல் மணிமாடப் பக்கம்எலாம் புனைக
அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
உரை: தோழி! என் கணவராகிய சிவபெருமான் எழுந்தருளும் ஒப்பற்ற தருணம் இதுவாகும்; நீ பராமுகமாய் இருக்காமல் மணி இழைத்த மாடத்தின் பக்கமெல்லாம் அலங்காரம் செய்க; பளிங்கு மணியாலாகிய மேடையின் நடுவே மிக்க அழகு பெறுமாறு பள்ளியணையை அலங்கரிப்பதற்கு நான் விரைந்து செல்கின்றேன்; உயர்ந்த சிவகதியைத் தருபவராகிய நம் பெருமானுடைய நல்வரவு நிச்சயமாதலால் மணிவிளக்குகளின் ஒளி எங்கும் பரவுமாறு மகிழ்ச்சியோடு வரிசையாக வைத்துப் புண்ணியமூர்த்தியாகிய அவருடைய வரவை மனதில் நன்கு எண்ணிக் கொண்டு புதிய புதிய மணிகள் இழைத்த ஆசனங்களை இடுவாயாக. எ.று.
பதி - சிவபெருமான். பராக்கு - பாராமுகம். பளிங்கு மணியால் ஆன மேடை மிக்க அழகு பொருந்தியதாதலால் அதனை, “அதிக நலம் பெறும் பளிக்கு மணிமேடை” என்று தலைவி கூறுகின்றாள். அம்மேடையின் மேல் படுக்கை அமைதலால் அதனைத் தானே நேரில் அலங்கரிப்பது விளங்க, “அணையை அலங்கரித்திட நான் விரைந்து புகுகின்றேன்” என உரைக்கின்றாள். சிவபெருமானது போகம் தரும் நிலை சிவகதி எனப்படுவதால் அவரை “கதி தருவார்” என்று சிப்பிக்கின்றாள். மணி இழைத்த விளக்குகள் என்பதற்கு “மணிவிளக்கு” என்றும், இருளில்லாதபடி எங்கும் ஒளி பரவ விளக்குகளை வரிசை வரிசையாக வைப்பதால், “மணி விளக்கால் கதிர் பரவ நிரைத்து” என்றும் கூறுகின்றாள். மாணிக்கம், மரகதம், வைரம் முதலிய மணிகள் இழைத்த ஆசனங்கள் என்பாளாய், “புதிய நவமணி குயின்ற ஆசனங்கள்” என்று குறிக்கின்றாள். புண்ணிய மூர்த்தியாதலால் சிவனை, “புண்ணியனார்” என்று போற்றுகின்றாள். (21)
|