5735. மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்
மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்
நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி
எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்
என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.
உரை: தோழி! அம்பலத்தில் ஆடுகின்ற சிவபெருமானாகிய என் கணவருடைய நல்வரவை யான் மிக்க உவகையோடு நினைக்குந் தோறும் என்னுடைய மனம் நெகிழ்ந்துருகி நல்ல பசுவின் பால் திரளில் மணம் மிக்க நெய்யும் தேனும் நல்ல கருப்பஞ் சாற்றிலிருந்து காய்ச்சி எடுத்த சர்க்கரையும் கலந்து இப்பொழுது நிரம்ப உண்டாற்போல இனிமை மிகுந்து மேலோங்கி என்னை முழுதும் விழுங்கி விடுகிறது என்றால் இப்பொழுது என் உயிர் போன்ற அவரைக் கண்டு அணையும் காலத்தில் எனது இன்ப நிலை என்னவாகுமோ? நான் யான் சொல்வேன். எ.று.
மன்றாடும் கணவர் - திருச்சிற்றம்பலத்தில் ஆடல் புரிகின்ற எனக்குக் கணவராகிய சிவபெருமான். மனம் கனிவுறுதல் - மனம் நெகிழ்ந்து உருகுதல். பால் திரள் - பாலை மிகக் காய்ச்சி எடுத்த திரட்சி. இனிமையின் மிகுதி விளங்க, “இனித்தினித்துப் பொங்கி” என இசைக்கின்றாள். ஆவி அன்னவர் - உயிர் போன்ற காதலர். சரிதம், என்றது நிலைமை குறித்து நின்றது. (22)
|