5736.

     கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
          குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
     நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
          நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
     ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
          ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
     ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
          என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.

உரை:

     தோழி! என்பால் வந்து என்னைக் கூடிய கணவராகிய சிவனுடைய நல்வரவை நானே நினைக்குந் தோறும் ஒளி மிகுகின்ற என்னுடைய மனம் உயர்ந்த பொன் மலையின் முடிமேல் வாழ்கின்ற தேவர்களுடைய நெடிய முடிமேல் இருக்கின்றது என்று சொல்வேனோ? அன்றியும், அப்பெருமான் ஆடி அருளுகின்ற பொன்னம்பலத்தின் நடுவே உள்ள ஞான சபையினது நடுவே நின்று ஆடுகின்ற திருவடியின் நிழற் கீழ் இருக்கின்றது என்பேனோ? என்னுடைய தலைவராகிய அவரை நேரில் கண்டால் என் மனத்தின் இயல்பை அறிந்து எடுத்தோதுபவர் யாவர் இருக்கின்றார்கள். எ.று.

     நல்வரவு என்பது நல்வரத்து என வந்துளது. சிவனை நினைக்கும் திருவுள்ளம் ஞான ஒளிகொண்டு விளங்குவது பற்றி, “ஒளி எறிக்கின்ற மனம்” என்று உரைக்கின்றாள். சிவன் உறையும் மேருவாகிய பொன்மலையில் தேவர்கள் இருப்பது விளங்க அவர்களை, “பொன்மலை முடி மேல் வாழ்வடைந்த தேவர்” என்று சிறப்பிக்கின்றாள். பொற்சபையின் நடுவில் சிற்சபையும் அதன் நடுவில் சிவபெருமான் நின்று ஆடி அருளுகின்ற சிறப்பும் விளங்க, “பொற்சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற திருவடி” என்று தெரிவிக்கின்றாள். ஞான ஒளி பெற்று விளங்கும் எனது மனம் பொன் மலை மேலுள்ள தேவர்களின் முடி மேலதோ? சிற்சபையில் ஆடி அருளுகின்ற திருவடியின் கீழதோ? எங்குளதோ? அதனை ஒருவரும் அறியார் என்பது கருத்து. மலரிதழ்களாலான மாலையணிந்த கூந்தலை உடையவளாதலால், “ஏடவிழ் பூங்குழலாய்” என்று தோழியைப் புகழ்கின்றாள். சரிதம் என்பது ஈண்டும் நிலைமை குறித்து நின்றது.

     (23)