5737. அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
உரை: தோழி! திருவருள் ஞானத் தலைவராகிய சிவபெருமான் வந்தருளுகின்ற காலம் இதுவாதலால் பல ஆயிரம் கோடி என்ற கணக்கில் அழகிய விளக்குகளை ஏற்றி வைப்பாயாக; அவற்றிற்குத் தெளிந்த பசு நெய்யே பெய்வாயாக; வேறு நெய்களை ஊற்றுவாயாயின் அவை அவருடைய திருமேனிக்கு மாசு செய்தாலும் செய்யும்; மேலும் இது காலைப் போதாகலின் இருள் இராது அன்றோ விளக்கேற்றுதல் வேண்டுமோ என்று மயங்க வேண்டா; விளக்கேற்றுவது மங்கலப் பொருட்டாம்; அவருடைய திருமேனியில் விளங்கும் ஒளி நமது மனவெல்லையைக் கடந்தது; சூரியன் சந்திரன், நெருப்பு ஆகியவை ஒன்று கூடி ஒளிரினும் அவர் மேனி ஒளிக்கு நிகராகாது; நான் சொல்வது கேட்டு மனம் மருளாதே. எ.று.
திருவருள் ஞானமாகிய செல்வத்தை வேண்டுவோர்க்கு வரையாது வழங்குபவராதலால், “அருளாளர்” எனச் சிவனைப் பாராட்டுகின்றாள் எனினும் அமையும். அணி விளக்கு - அணி அணியாக நிறுத்தி ஏற்றப்படும் விளக்கு. தெருள் - தெளிவு. மாசு - புகையும் கரியும் படிதல். காலைப் பொழுதிலும் விளக்கேற்றி வைத்தல் மங்கலமாம் என்பது குறிப்பு. தூய நெருப்பைச் “செங்கனல்” என்று சிறப்பிக்கின்றார். (24)
|