5738. என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.
உரை: தோழி! என்னுடைய கண்கள் இரண்டினும் உள்ள கருமணியை ஒப்பவரும், என் உயிர்க்கு நாயகரும், அமுதாகியவரும், எல்லாம் செய்ய வல்லவரும், பொன் வேய்ந்த அழகிய பொற்சபை சிற்சபைகள் உடையவரும், என்னைப் புறத்திலும் அகத்திலும் புறத்தகத்தும் கூடினவருமாகிய சிவபெருமான் எனக்கு வேறானவர் அல்லர்; அவரே எனக்குக் குலதெய்வம்; நான் செய்த அரிய தவத்தால் எனக்குக் கிடைத்த ஞான குருவும் ஆவர்; அது மட்டோ? நிலைத்த எனக்கு ஒப்பற்ற தந்தையும் தாயும் அவரே; பெற்ற மக்களும் செல்வமும் மிக்குச் சூழ்ந்த உறவினரும் அவரேயாவர். எ.று.
கண்ணுக்குக் கருமணி போல உயிர் அறிவுக்கு அறிவருளுவது பற்றிச் சிவனை, “என் இரு கண்மணி அனையார்” என்று போற்றுகின்றாள். சிந்திக்குந்தோறும் சிந்தையில் தேனாய் நிறைந்து இன்பம் செய்தலால், “என் உயிர்க்கு அமுதானார்” என்று புகழ்கின்றாள். பொற்சபையின் நடுவே சிற்சபையும் அதன் நடுவே அவர் ஆடுவதும் விளங்க, “பொற் சபையாளர் சிற்சபையாளர்” எனச் சேரக் கூட்டித் தெரிவிக்கின்றார். உயிர்ப் பொருள்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் யாண்டும் கலந்திருப்பது பற்றிச் சிவனை, “புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்” என்று புகல்கின்றாள். ஞான குருவைப் பெறுதல் அரிது என்பது விளங்க, “அருந் தவத்தால் கிடைத்த குருவாகும்” என்று கூறுகின்றாள். மிகுதியான திருவையுடைய உறவினர் என்பாளாய், “மிக்க திருவொக்கலும் அங்கு அவரே” என்று சொல்லித் தலைவி இன்புறுகின்றாள். (25)
|