5739. தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
வீறுமவர் திருமேனி நானும்என அறியே.
உரை: இளையவளாகிய தோழியே! என் கணவராகிய சிவனை எனக்குத் தந்தை என்றாய், மகன் என்று சொல்லுகின்றாய், மணவாளன் என்று மகிழ்கின்றாய்; இவ்வாறு பேசுவது இங்கு தகுமோ என்று என்னைக் கேட்கின்றாய்; நான் சொல்வதை மனதால் நினைத்துப் பார்ப்பாயாக; ஞான சபையில் நடிக்கின்ற திருவாளராகிய என்னைக் கூடிய கணவராகிய சிவன் முடிவும் இடையும் முதலும் இல்லாத அரும் பெரும் சோதியாவார்; அண்டங்களில் உள்ள சரப் பொருள் அசரப் பொருள் ஆகிய எல்லாவற்றையும் தோற்றுவித்தது அப்பரஞ்சோதியன்றி வேறில்லை; நான் எவ்வாறு பொய் சொல்லுவேன்; மற்றவர்களைப் போல நான் பொய் சொல்ல மாட்டேன்; எல்லாவற்றிற்கும் முடிவாகுபவரான அவருடைய திருமேனியே நானும் என அறிவாயாக. எ.று.
மடவாய் - இளமைத் தன்மை உடையவள். சிந்தை செய்தலாவது மனதால் நிறைந்து உண்மையறிதல். ஆதியும் அந்தமும் முடிவுமில்லாத அருட் பெருஞ் சோதியே சிவபெருமான் என்பாளாய், “அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி” என்று உரைக்கின்றாள். அந்த அரும் பெரும் சோதியே அண்டங்களில் உள்ள இயங்குதிணைப் பொருள்களும் நிலைத்திணைப் பொருள்களும் ஆகிய எல்லாவற்றையும் படைத்துக் காத்தளிப்பது; அதுவன்றி வேறில்லை எனத் தெளிவித்தற்கு, “அண்ட சராசரங்கள் எல்லாம் கண்டது வேறிலை” என்று விளம்புகின்றாள். எல்லாவற்றிற்கும் ஒடுக்கமாய் இருப்பவரும் அவரே என்பாளாய், “அம்மாவீறும் அவர்” என்று எடுத்துரைக்கின்றாள். அவருடைய திருமேனியின் கூறே நானுமாதலால் நான் சொல்வதன் உண்மையை இனிது உணர்வாயாக என உரைக்கின்றவள், “அவர் திருமேனி நானும் என அறியே” என்று அறிவிக்கின்றாள். (26)
|