5740.

     எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்
          இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
     நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய
          நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
     இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்
          என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
     செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்
          சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.

உரை:

     தோழி! எல்லாவற்றையும் செயல் வல்ல ஒப்பற்ற தலைவராயும் அம்பலத்தில் எழுந்தருளித் திருக்கூத்தாடுகின்ற அரும் பெருஞ் சோதியை உடையவரும் ஆகிய சிவபெருமான் நலம் நிலவும் நாட்டில் உள்ளவர்கள் எல்லாரும் அறியும்படியாக என்பால் வந்து என்னைப் புண்ணிய மூர்த்தியாய் ஞான மணம் புரிந்து கொண்டார்; அதனால் எனக்கு வறுமை என்பது இல்லை; வேண்டுவோர் எல்லார்க்கும் வேண்டியதெல்லாம் தருவேன்; என்னுடைய பெரிய செல்வத்தின் சிறப்பை நான் எவ்வாறு எடுத்துச் சொல்லுவேன்; மனித இயக்கம் இல்லாத அண்டங்களில் மட்டும் தானோ என்று என்ன வேண்டாம்; அவற்றிற்குப் புறத்திலும் அப்பாலும் அவருடைய சிவஞானமாகிய பெருஞ் செல்வம் சிறந்து விளங்குகின்றது; அதனை நீ நன்கு அறிவாயாக. எ.று.

     வரம்பில் ஆற்றல் உடையவர் என்பது பற்றிச் சிவனை, “எல்லாமும் செய்ய வல்ல தனித்தலைவர்” என்று சிவனைப் புகழ்கின்றாள். அரும் பெரும் சோதியாக நின்று அம்பலத்தில் ஆடல் புரிகின்றார் என்று சான்றோர் கூறுவது பற்றி, “பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெருஞ் சோதியினார்” என்று விளக்குகின்றாள்; அவர் என்னை நன்ஞான மணம் புரிந்து கொண்ட நலத்தை, நன்ஞான நற்செயல்களே நிலவும் நாட்டவர் பலரும் அறிவர்; அதற்கேற்ற சிவபுண்ணியத்தை நான் செய்திருக்கிறேன் என்பாளாய், “நல்நாட்டார்கள் எல்லாரும் அறிய நண்ணி எனை மணம் புரிந்தார் புண்ணியனார்” என்று புகல்கின்றாள். புண்ணியப் பயனால் எனக்குப் பெருஞ் செல்வம் எய்தி உள்ளது எனச் செப்புகின்றவள், “இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெருஞ் செல்வம் என் புகல்வேன்” என்று இயம்புகின்றாள். நான் பெற்ற சிவஞானமாகிய பெருஞ் செல்வம் அண்டங்களிலும் அவற்றிற்கு அப்பாலும் நிறைந்துளது எனத் தெரிவித்தற்கு, “அண்ட மட்டுமோ அப்புறத்து அப்பாலும் சிவஞானப் பெருஞ் செல்வம் சிறப்பது கண்டு அறியே” எனத் தெரிவிக்கின்றாள்.

     (27)