5741. வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
தான்கண்ட குடியானேன் குறைகள்எலாம் தவிர்ந்தேன்
தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
உரை: தோழி! வானுலகத்தில் உள்ள பிரமர்களும் நாரணர்களும் மற்றைத் தேவர்களும் பலகாலும் பெரிய தவங்களைச் செய்தும் சிவபரம் பொருளைக் காண்பதற்கு முடியாமல் வருந்துகின்றார்கள்; ஐயோ, நான் கண்டு மகிழ்கின்ற சிவக் காட்சியை அவர்கள் கண்டிலர்; இவ்வுலகில் நான் ஒருத்தி பெண்ணாய் நின்று எத்தகைய தவஞ் செய்தேனோ; தெரியவில்லை; அரசர்களால் கண்டு மதிக்கப்பட்ட குடி மக்களுக்கு ஒருகுறையும் இல்லை என்று கூறுவர்; அஃது உண்மை யாதலால் அண்டகோடிகள் எல்லாவற்றிலும் ஒப்பில்லாத பெரிய செங்கோல் நடத்தும் இறைவராகிய சிவபெருமானால் நன்கு மதிக்கப் பெற்ற குடியாயினமையால் யான் குறை யாதும் இல்லாதவளாயினேன்; அன்றியும் ஒப்பற்ற வெண்மையான தவள மாளிகையில் நான் இறுமாந்து இனிது இருக்கின்றேன். எ.று.
வானுலகத்தில் வாழ்தலால் பிரமன் நாரணன் முதலிய தேவர்களை, “வான் கண்ட பிரமர்களும் நாரணரும்” என மொழிகின்றாள். வானுலகங்களைப் படைத்தளிப்பது பற்றி, “வான் கண்ட பிரமர்கள் நாரணர்கள்” என்று உரைக்கின்றாள் எனினும் பொருந்தும். பெண் பிறப்புக்குச் சிவஞான யோக போகங்கள் இல்லை எனக் கூறும் சமயத்தவரும் உளராதலால், “நான் ஒரு பெண் செய்த தவம் எத்தவமோ அறியேன்” என வியந்துரைக்கின்றாள். கோன் மதிக்கும் குடிக்குக் குறைவில்லை என்பது பழமொழியாதலின், “கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறையிலையேல்” என்று கூறுகின்றாள். இறைவர் - அருளரசனாகிய சிவபெருமான். குறையிலாப் பெருவாழ்வு பெற்றுப் பிறங்குவது விளங்க, “தனித்தவள மாடமிசை இனித்திருக்கின்றேன்” என்று மகிழ்ந்துரைக்கின்றாள். இனிதிருக்கின்றேன் என்பது எதுகை நோக்கி இனித்திருக்கின்றேன் என வந்தது. (28)
|