5742. என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
உரை: தோழி! உன்னுடைய கணவரது சிறப்பை எடுத்துரைப்பாய் என்று நீ என்னைக் கேட்கின்றாய்; அதனை அறிதற்கு முதற்கண் நீ உத்தமனாகிய அவருடைய திருவருள் ஞானமாகிய ஒளியைப் பெறுதற்கு மனமார விரும்புதல் வேண்டும்; என்னுடைய கணவராகிய சிவனுடைய பெருந்தன்மையை வேதாந்தம் முதலிய அந்தங்களின் உயர்நிலையில் நெருங்கி நின்று பார்ப்பவர்க்கும் தெரியாது என அறிக; திருமகள் கணவராகிய திருமாலுக்கும் கலைமகள் கணவராகிய பிரமன் முதலிய தேவர்களுக்கும் புலவர்களால் புனைந்துரைக்கப்படும் புராண கதை போல எண்ணி உரைக்கப்படுவதில்லை; அந்த உண்மையை அறியாமல் அவர்கள் புலம்புகின்றார்கள்; அவர்களைப் போலச் சொல்லப்படுகின்ற வேதங்களும் ஆகமங்களும் அறிய மாட்டாது புலம்புகின்றன என அறிவாயாக. எ.று.
உன் கணவருடைய பெருமை நலங்களை உரைப்பாய் என்று கேட்பாளாய், “உன் கணவர் திறம் புகல்” என்று தலைவியை நோக்கித் தோழி கேட்கின்றாள். சிவனது பெரிய பரந்த தன்மையை அறிதல் வேண்டின் சிவஞானத்தால் சிறத்தல் வேண்டும் என்று வற்புறுத்தற்கு, “நீதான் உத்தமனார் அருட்சோதி பெற்றிட முன் விரும்பே” என்று தலைவி மொழிகின்றாள். பெருந்தன்மை - பெரிதாகிய பரந்து விரிந்த தன்மை; அனந்த கல்யாண குணம் எனினும் பொருந்தும். ஆறு அந்தங்களாவன; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், கலாந்தம், யோகாந்தம், என்பனவாகும். புனைந்துரைக்கும் கதை-புராணகதை. நினைந்துரைத்தல் - எண்ணி யுரைத்தல். புன்கணவர் - துன்பத்தை யுடையவர். கற்பித்துரைக்கும் செயலில் அமைந்திருக்கும் வருத்த மிகுதியை, “புன்கண்” என்று புகல்கின்றாள். அருட்சோதி - திருவருள் ஞான விளக்கம். (29)
|