5743. ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
உரை: தோழி! இவ்விடத்தே சிலர் என்னை நோக்கி உணவு கொள்ள வருக என்று அழைக்கின்றார்கள்; நான் இவர்களுக்கு யாது சொல்லுவேன்; உயர்ந்த நிலா முற்றத்தின்கண் நான் என் கணவரோடு தெவிட்டாத தெளிந்த ஞானவமுதத்தை உண்டு பசி இல்லாதவளாகிவிட்டேன்; தேன் கமழும் கூந்தலையுடைய தோழியே! இவ்விடத்தே எனக்கு இனிப் பசி உண்டாகுமானால் அப்போது உணவு தருக என்று சொல்லுக; இப்போது என்னை அடிக்கடி அழைக்க வேண்டாம்; வேறே வந்திருப்பவர்க்கும் புதியவராய் வருபவர்க்கும் இனிது பசி தீர உண்ணுமாறு தெரிவிப்பாயாக; இன்னும் உணவு கொள்ள வரவில்லையே என்று என்னை நினைந்து காத்திருக்க வேண்டுவதில்லை என்று தலைவி மொழிகின்றாள். எ.று.
நிலா மண்டபம் - மாளிகையின் மாடப் பகுதியில் நிலவின் ஒளி நன்கு நிலவ அமைந்த இடம். இது நிலா முற்றம் எனவும் வழங்கும். இங்கே அது நிலா மண்டபம் எனக் குறிக்கப்படுகின்றது. உவட்டாத தெள்ளமுதம் - உண்ணத் தெவிட்டாத இனிய அருளமுதம். தேன் குழல் என்பது தேங்குழல் என வந்தது. இது தோழிக்கு அன்மொழித் தொகை. அடிக்கடி அழைத்தலைச் “சிலுகிழைத்தல்” என்று தலைவி வழங்குகின்றாள். பன்முறை அழைத்தும் உணவுகொள்ள வரவில்லையே என்று கொள்ளும் வருத்தத்தை, “ஏங்கல்” என்று இயம்புகிறாள். (30)
|