5744.

     ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
          அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
     மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
          வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
     கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
          கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
     வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
          மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.

உரை:

     தோழி! தலைவரும் என்னை ஆளாக வுடைய பெருமானும், அரும் பெரும் அருட்சோதியை உடையவரும், அம்பலத்தில் ஞான நடனம் புரியும் ஆனந்த வடிவினரும் மெய்ம்மையே உருவானவரும், என்னை ஞான மணம் செய்து கொண்ட ஒப்பற்ற கணவரும் ஆகிய சிவபெருமான் துரியத்தில் விளங்கும் ஞான வெளியில் நிலா முற்றத்தே எழுந்தருளித் திருவருளாகிய அமுதத்தை எனக்கு அளித்து என் கையில் பசும் பொன்னால் ஆகிய ஒரு கங்கணத்தையும் அணிந்தருளினார்; அக்கங்கணத்தின் சிறப்பு என்னால் அறிந்து உரைக்கப்படுவதாக இல்லை; அதற்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் அதற்கு நிகராக மாட்டாது என்றால் அதன் மதிப்பு அறிதற் கரியது எனத் தெளிவாயாக. எ.று.

     திருவருள் சோதியே வடிவாக உடையவராதலால் சிவனை, “அரும் பெரும் சோதியினார்” என்று தெரிவிக்கின்றாள்; மெய்ம்மையின் தோற்றமே சிவமாதலால், “மெய்யர்” என்று சிவனைப் புகழ்கின்றாள். துரிய வெளி என்பது உந்தித்தானமாகிய யோக வெளி. யோகியர் அதனைச் சுவாதிட்டானம் என்று சொல்லுவர். அங்கே ஞானத் தானத்தை நிலா மண்டபம் என்று உருவகம் செய்கின்றார். துரிய வெளியில் ஞான அமுதளித்த பரமன் புறத்தே கையில் சிவ யோகத்துக்கு அடையாளமாகக் கங்கணம் புனைந்தார் என்று கூறுகின்றாள். அது சிவயோகத்தின்கண் எய்தப்படும் சிவஞானானந்தம் ஆதலால் அதன் சிறப்பைத் தன்னால் அணிந்துரைக்க முடியாது என்பாளாய், “கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டுரைக்கப் படுமோ” என்று கட்டுரைக்கின்றாள். நினைத்தால் வையகத்தையும் வானத்தையும் படைத்தளிக்கும் பரம ஆற்றலுடையதாதலால் அதற்கு, “வையகமும் வானகமும் கொடுத்தாலும் மாறாக மாட்டாது” என்றும், “மதிப்பு அரிதாம்” என்றும் தலைவி சாற்றுகின்றாள். மாறு - கைம்மாறு.

     (31)