5745.

     தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
          தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
     பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
          புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
     என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
          இருந்தபடி என்புகல்வேன் எள்அளவன் றதுதான்
     முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
          முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.

உரை:

     தோழி! தனக்கு நிகர் தானே ஆகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் ஒப்பற்ற திருநடம் புரிகின்ற பெரிய தலைவரும் பொற்சபையில் மேவுகின்ற என் கணவருமாகிய சிவபெருமானுடைய பொன் வண்ணமேனி இருக்கின்ற நிலைமையை எண்ணும் போதெல்லாம் சொல்லுதற்கரிய பேரானந்தமாகிய சிவபோக வெள்ளம் போல் நிறைந்து ததும்பி என் மேனியின்கண் பொங்குகின்றது; அந்நிலையில் எனது உள்ளத்தின் இயல்பு இருக்கும் நிலையை நான் எவ்வாறு எடுத்துரைப்பேன்; அஃது என்னளவில் நிற்கின்ற தன்று; என்னுடைய முன்னைய வடிவமும் உருகிக் கரைந்து சர்க்கரையும் தேனும் முக்கனியும் கலந்துண்ட அளவினும் மிக்கதாகும். எ.று.

     சிவனது திருமேனி பொன் மயமாய் இருத்தலால் அதனை, “பொன் வடிவம்” என்று புகல்கின்றாள். அவருடைய பொன் வண்ணத் திருமேனியைச் சிந்திக்கும்போது சிவானந்தப் பெருந்தேன் ஊறிப் பெருகும் என உயர்ந்தோர் கூறுவதால் அதனை, “பேரானந்த போக வெள்ளம் ததும்பி என் வடிவில் பொங்குகின்றது அம்மா” என்று பூரித்துரைக்கின்றாள். அது வாக்கு மனங்களுக்கு எட்டாதது என்பாளாய், “என் அளவன்று அதுதான்” என்று இயம்புகின்றாள். அப்பொழுது தனக்கு உண்டான சிவானந்த அனுபவத்தை, “இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்குவமும் சாலாது” என்று சாற்றுகின்றாள்.

     (32)