5746. இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
உரை: மான் போன்ற கண்களையுடைய இளமங்கையாகிய தோழியே! இவ்வுலகில் என்னைப்போல் அன்புடைய மக்கள் அனந்தம் கோடி இருக்கின்றார்கள்; அவர்களில் என்னினும் உயர்ந்தவர்கள் எத்தனையோ கோடி இருக்கின்றனர். மேலுலகிலும் சிறந்து நிற்பவர் அளவில்லாத கோடிக்கணக்கில் உள்ளனர்; அத்தனை பேர்களும் கண்டு மகிழ்தற் பொருட்டு நாள்தோறும் வருந்திக் கொண்டு கிடக்கின்றாராக, எவ்வுலகத்தவரும் உணர்வதற்கரிய திருச்சிற்றம்பலத்தின்கண் இனிது காட்சி தருகின்ற தலைவராகிய சிவபெருமான் இங்கே என்னை ஞான மணம் செய்து கொண்டார்; அவரது மேனியில் திகழும் அருட் சோதியை மேலோ, கீழோ, எவ்விடம் என்று ஆராய்ந்தறிதற்கு வாய்ப்பில்லை என அறிக. எ.று.
என்னைப் போல்பவரும் என்னினும் உயர்ந்தவர்களும் இவ்வுலகிலும் என்னில் சிறந்தவர்கள் மேலுலகிலும் அவனது காட்சி பெரும் வேட்கையால் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என விளக்குவதற்கு, “அத்தனை பேர்களும் அந்தோ நித்தம் வருந்திடவும்” என்று கூறுகின்றாள். நித்தம் - நாள்தோறும். தனது இனிய காட்சியை நல்கும் பொருட்டுச் சிவபெருமான் திருச்சிற்றம்பலத்தே இருக்கின்றமை விளங்க, “திருச்சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர்” என்றும், அவரது திருவருள் ஞானம் தனக்கு எய்தி உள்ளமை விளங்க, “இங்கே என்னை மணம் புரிந்தார்” என்றும் இயம்புகின்றாள். நவ்வி - மான். மடமாது - இளம் பெண். சிவபரம்பொருளின் திருமேனியில் திகழும் அருட்சோதி அவர் மேனியின்கண் மேலோ கீழோ எவ்விடத்து ஒளிர்கின்றது என்பதை யாரும் அறிந்து கொள்ளமுடியாது என்பாளாய், “நாதர் திருவருட் சோதி கீழ் மேல் என்பதுதான் நாடுவதொன்றிலையே” என்று நவில்கின்றாள். அருட் சோதி நாதருடைய திருவடி கீழ் என்றோ திருமுடி மேல் என்றோ இடம் பற்றிய அறியப்படுவ தொன்றன்று என்பது கருத்து. (33)
|