5747.

     திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
          சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
     உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
          ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
     பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
          பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
     துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
          சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.

உரை:

     தோழி! அருட் செல்வத்தை ஆள்பவரும், பொற் சபையில் இன்ப நடனத்தைச் செய்பவரும், ஞான சபையைத் தனக்கே உரியதாகக் கொண்டவரும் ஆகிய கூத்தப் பெருமான் எனக்குத் தமது தோளில் அணிந்த திருமாலையைக் கொடுத்தருளினார்; அழகிய உருவுடையவராய் அருவாகியும் அருள் ஒளியாகியும் அருள் ஞான வெளியாகியும் உயர்ந்தோங்குகின்ற அவர் என்னுடைய இனிய உயிர்க்குத் துணையாகுபவர்; அவருடைய பெரிய வாய்மை பொருந்திய திருவருளைப் பெறுவதே இன்பப் பெருவாழ்வு என்று மெய்யுணர்ந்தோர் ஆகிய மாணிக்கவாசகப் பெருமான் உரைத்தருளிய திருவாசகத்தின் பெருமையை நான் இன்று உணர்ந்து கொண்டேன்; உண்மை தெளிந்து காணாத எனக்கும் இங்கே சிவபெருமானுடைய திருவருளை நினைக்குந்தோறும் சொல்லுதற்கரிய இன்ப சுகம் எனக்குத் தோன்றுகிறது; இது என்னையோ? எ.று.

     பொற்சபையின் உள்ளே திகழ்வது சிற்சபை என அறிக. திருமாலை என்றது திருவருள் ஞானம் எனக் கொள்க. உருவம் அருவம் உருவருவம் எனப் பல உருவங்களை ஏற்பவர் என்பது பற்றி, “உருவாளர்” என்று சிறப்பிக்கின்றாள். அருள் ஒளியும் ஞான வெளியுமாய் விளங்குவது பற்றி, “ஒளியாகி வெளியாய் ஓங்குகின்றார்” என்று உரைக்கின்றாள். சிவனது திருவருளைப் பெறுவதே பெருவாழ்வு எனத் தாம் அருளிய திருவாசகத்தின்கண் பல இடங்களிலும் பெரிதும் எடுத்துப் பேசுவதால், “பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய்வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன்” என்று இயம்புகின்றாள். உணர்ந்தோர் என்பது மெய்யுணர்ந்தோராகிய மாணிக்கவாசகப் பெருமானே என உணர்க. அவருடைய மெய் வாசகம் திருவாசகம் என வழங்குகின்றது. துருவுதல் - நுணுகி ஆராய்தல். சொல்லளவல்லாத சுகம் - சொற்களால் சுட்டி உரைக்க முடியாத சிவபோகம்.

     (34)