5748. அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கிள் அளவோ
இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
உரை: தோழி! அருட் செல்வத்தை வழங்குபவரும், பொற் சபையில் ஆனந்த நடனத்தைச் செய்யும் இன்ப வடிவினரும், என்னை ஆட்கொண்டருளுபவரும் ஆகிய சிவபெருமான், நான் தெளிந்த அறிவு பெறாத இளம் பருவத்தேயே என்னை அறிவு தெளிவித்து ஞான மணம்புரிந்து கொண்டாராதலால் திருவாளராகிய அவருடைய பெருமையின் நலத்தை யாவரே எடுத்துரைப்பார்கள்; மயங்குதல் இல்லாத சிவாகமங்களும் தெய்வ வேதங்களும் அவர் திருமுன் மயங்குகின்றன என்றால் யாது சொல்வது; நம்முடைய மனத்துக்கும் வாக்குக்கும் எட்டும் அளவின அல்ல; தெளிவுடைமை எப்பொழுது என் அறிவின்கண் எய்துமோ அப்பொழுது யான் உனக்குச் சிறிது சொல்லுவேன் என்று வாயால் சொல்லுதற்கும் நாணம் என்னை ஒடுக்குகின்றது; நான் எவ்வாறு சொல்லுவேன். எ.று.
தமது திருவருள் ஞானத்தை வரையாது வழங்கும் இயல்பினராதலால் சிவனை, “அருளாளன்” என்று தெரிவிக்கின்றாள். ஆனந்த வண்ணர் - வரம்பில் இன்ப வடிவினர். தெருளாத பருவம் - தெளிய அறிய வேண்டுவனவற்றை அறிந்து கொள்ள மாட்டாத இளம் பருவம். தெருட்டுதல் - தெளிந்தறியச் செய்தல். மருட்சி இல்லாத சிவஞானிகளால் உரைக்கப்பட்டமை பற்றிச் சிவாகமங்களை, “மருளாத ஆகமங்கள்” என்று மொழிகின்றாள். மருளாத என்பதை மறைகள் என்பதனோடும் கூட்டி மருளாத மாமறைகள் என்று இயைத்துரைப்பதும் உண்டு. இருளாமை - தெளிவுடைமை. சிறிது உரைப்போம் என்று சொல்லுதற்கும் பெண்மைக்குரிய நாணம் இடை புகுந்து தடுக்கின்றது என்பாளாய், “சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன்” என்று தலைவி வாய் விட்டுரைக்கின்றாள். (35)
|