5749. செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
உரை: தோழி! சிவந்த பவளத்தாலாகிய அழகிய மலையோ? மாணிக்க மணியின் இயன்ற விளக்கோ? தெய்வத் தன்மை பொருந்திய மரகத மணியின் திரட்சியோ? செழுமையான நீலமணியால் ஆகிய மலையோ? நெருங்கிய மணி ஒளியோ? நல்ல பசுமையான பொன்னிடத்து ஒளிரும் சுடரொளியோ? படிக மணியினிடத்து விளங்கும் அழகிய பெரிய காட்சியோ என்று உள்ளத்தால் உணர்ந்து எம்பெருமானுடைய புறத்தோற்றம் யாதோ, உரைப்பது எம்மால் இயல்வதன்று என்று அறிஞர்கள் கூறுவார்களானால் அவருடைய அகவண்ணத்தை யாவரே உரைக்க வல்லவராவர்; என்னை அன்று ஞான மணம் புரிந்து கொண்டவரான ஞான சபைத் தலைவராகிய அவருடைய இயல்பினை எங்ஙனம் சாற்றுவது; எம்மால் இயல்வதன்று. எ.று.
பவளம் சிவந்த நிறத்தை உடையதாதலால், செம்மேனி அம்மானாகிய சிவபெருமானை, “செம்பவளத் திருமலையோ” என்று சிறப்பிக்கின்றாள். வெண்ணீறு சண்ணித்த திருமேனி என்பது பற்றி, “மாணிக்க விளக்கோ” என்று புகழ்கின்றாள். நீல மேனியை உடைய உமாதேவியின் கூறும் ஒருபால் பசுமை நிறமும் சிறந்து மிளிர்வதால் அதுவும் சிறக்க, “தெய்வ மரகதத் திரளோ; செழும் நீலப் பொருப்போ” என்று தெரிவிக்கின்றாள். வேறு மணி வகைகளின் நிறமும் பொருந்துவதால், “பம்பு மணி ஒளியோ” என்று பகர்கின்றாள். பம்புதல் - நெருங்குதல். படிக மணியின் தூய்மையும் ஒளியும் திகழ்வது கண்டு, “படிக வண்ணப் பெருங் காட்சி தானோ” என்று கூறுகின்றாள். எம்பெருமானுடைய புற வண்ணத்தை எம்பரம் அன்று என்று சொல்லுவாராயின் அவருடைய அகவண்ணத்தை எடுத்துரைப்பவர் ஒருவருமில்லை என்பது கருத்து. உயிர்களைச் சேர்வது அவர்க்கு இயல்பன்று எனினும் உயிர்கள் அவரைச் சென்றடைவது இயல்பாம் என்ற குறிப்பு தோன்ற, “தம்பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார்” என்பது குறிப்பாய் உணர நிற்கின்றது. (36)
|