5750. தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
சுமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலோடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
உரை: தோழி! தேவர்களும் முனிவர்களும் சிறப்புடைய முத்தர்களும் தெளிவுடைய சிவயோகிகளும் செம்பொருளாகிய பரசிவத்தைக் கண்டவர்களும் மூவர்களும் ஐவர்களும், முதல்வியாகிய பராசத்தியோ ஆதிசத்தியோ யாவரும் என்னால் கருதப்பட்ட தனித்தலைவராகிய சிவபெருமான் இயல்பை உணர்ந்தவர்கள் அல்லவென்றால் சிறியவளாகிய யான் உணர்ந்து உரைக்க முடியுமோ? ஒரு சிறிதும் இயலாது என அறிவாயாக; மிக்க அன்புடன் ஞானிகள் சூழ்ந்து நிற்க ஞான சபையில் நடிக்கின்ற பெருமானுடைய பெருமையை அவர் தாமே ஒருவாறு அறிந்தும் அறியாமலும் விளங்குகின்றார். எ.று.
முத்தர் - முத்திப் பேற்றால் சிவமாம் தன்மை எய்தினவர். செம்பொருள் கண்டார், மெய்யுணர்ந்த ஞானிகள். மூவர்கள் - பிரமன், திருமால் அரண் ஆகியோர். ஐவர் - சதாசிவன், மகேசுவரன், வித்தியேசுரர், மந்திரேசுரர், அனந்தேசுரர் இங்கே ஐவர் எனக் குறிக்கப்படுகின்றனர். முதற் பரை - முதல்வியாகிய பராசத்தி. பரமோ என்றது பராசத்திக்கு மேலதாகிய சிவசத்தி. முன்னுதல் - கருதுதல். அன்பர் - மெய்யன்பு நிறைந்த சிவஞானிகள். “அன்பே ஈசன்பால் ஞானம்” என்று சான்றோர் கூறுவதால் சிவஞானிகளை அன்பர் எனப்பொதுப்பட மொழிகின்றார். (37)
|