5751.

     திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டின்பத்
          திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
     அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
          அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
     பரிச்சிக்கும் அவ்வமுதின் நிறைந்தசுவை ஆகிப்
          பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
     உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
          ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.

உரை:

     தோழி! திருச்சிற்றம்பலத்தின்கண் அருள் திருவுருக்கொண்டு இன்பம் பொருந்திய அழகிய நடஞ் செய்கின்ற சிவபெருமான் திருவடிக்கே தொண்டு பூண்டு அருச்சனை புரியும் பெரிய அன்பர்களின் அறிவுக்கறிவாய் அந்த அறிவில் விளைகின்ற சிவானந்த அமுதமாய் உணரப்படும் அந்த அமுதின்கண் நிறைந்த சுவையாய் அதன் பயனாய் அந்த பயனால் விளையும் அனுபவ மயமாய் நிறைந்து இனிக்கும் என வேதங்களும் ஆகமங்களும் பிறவும் எல்லாம் உரைக்கின்றன என்றால் அப்பெருமானுடைய ஞான ஒளியை யாவரே வாய்விட்டுரைப்பர். எ.று.

     திருச்சிற்றம்பலத்தின்கண் உருக் கொண்டு விளங்கும் அருச்சனா மூர்த்தத்தை, “திருவுருக்கொண்டு இன்பத் திருநடம் செய்தருளுகின்ற திருவடி” என்று சிறப்பிக்கின்றாள். தொழும்பாதல் - தொண்டராய்ப் பணி செய்தல். தொண்டருடைய அறிவின்கண் அறிவுருவாய் அமைந்து சிவானந்த அமுதமாய் விளங்குதலால், “அறிவின்கண் அறிவாய் அவ்வறிவில் விளைந்த சிவானந்த அமுதமாய்” என்று தெரிவிக்கின்றாள். சுவை வேறு சுவையின் பயன் வேறு பயனால் விளையும் அனுபவம் வேறாதலால், “அமுதின் நிறைந்த சுவையாகிப் பயனாகிப் பயத்தின் அனுபவமாகி” என்று பகர்கின்றாள். பரிசித்தல் - உணர்தல். உருச்சித்தல் - அனுபவித்தல். ஆகமங்கள் எல்லாம் என்றதினால் ஆகமாந்தம் எனப்படும் வேறு நூல்களும் கொள்ளப்பட்டன. திருவுரு நல்கும் இன்பமே இத்துணைச் சிறப்பு வாய்ந்தது எனில் அதனிடத்து விளங்கும் ஒளி நலத்தை உரைப்பது அரிது என்பாளாய், “அவர்தம் ஒளி உரைப்பது எவரே” எனத் தலைவி இயம்புகின்றாள்.

     (38)