5752.

     வெடுத்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
          விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்தே
     தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
          தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
     இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
          இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
     பொடித்திருமே னியர்அவரைத் புணரவல்லேன் அவர்தம்
          புகல்உரைக்க வல்லேனா அல்லேன்காண் தோழீ.

உரை:

     தோழி! புறத்தோல் வெடிக்கப் பழுத்து முதிர்ந்த முக்கனிகளிலிருந்து வடிக்கப்பட்ட இனிய ரசத்திலே மனம் விரும்பும் வகையில் பிழிந்து எடுக்கப்பட்ட கரும்பின் சாற்றைக் கலந்து நீர் கலவாத செழுமையான பாலை அதன்கண் பெய்து கொம்பிலிருந்து எடுக்கப்பட்ட இனிய தேனைத் துளித் துளியாக விட்டுத் தெளிவித்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற மேலான அமுதத்தின்கண் கலந்து உண்டாற்போல நன்குரைத்து என் மனம் முழுதும் தித்திக்கும்படியான இனிய வார்த்தைகளைப் பேசி என்னை ஞான மணம் புரிந்து கொண்ட உயிர்த்தலைவராகிய வெண்மையான திருநீறு அணிந்த திருமேனியை உடையவராகிய சிவபெருமானை நான் கூடி மகிழ வல்லவளே யன்றி அவருடைய புகழை எடுத்துரைக்கும் வல்லமை உடையவள் அல்லள் காண். எ.று.

     முக்கனியின் ரசத்திலே கரும்பின் சாற்றைக் கலந்து பால் பெய்து கொம்புத்தேனைவிட்டுப் பரஅமுதத்தில் கலந்து உண்டதுபோல என இயையும். வான் - வெண்மையான திருநீறு. மேலுள்ள பட்டையை நீக்கி உள்ளிருக்கும் மென்மையான பழுதியிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு என்பது விளங்க, “உட்பிழிந் தெடுத்த கரும்பி ரதம்” என்றும், நீர் கலவாத பசும்பாலை, “தடித்த செழும்பால்” என்றும் சொல்லுகின்றாள். கோற்றேன் - கொம்புகளில் கட்டப்பட்ட செந்தேன். பரஅமுதம் - மேலான அமுதம். மேன்மேலும் இனிய வார்த்தைகளைச் சொல்லி உண்பித்தமை புலப்பட, “இடித்திடுத்து” என உரைக்கின்றாள்.

     (39)