5753.

     கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே
          கலந்தனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
     பன்னியருக் கருள்புரிந்தப திஉலக மெல்லாம்
          படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
     அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
          அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
     என்னியல்போல பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ
          என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.

உரை:

     தோழி! இளம் பெண்ணாகிய என்னை ஞான மணம் செய்து கொண்டு கணவராகிய பதியின் இயல்பு கூறுகின்றேன் கேள்; அருள் கனிந்த ஞான சபையின்கண் இருந்து அன்பர்களுக்குக் காட்சி வழங்கும் ஒப்பற்ற பதியும், ஞான ஒளி விளங்கும் கனக சபாபதியும், தேவ மகளிர்க்குத் திருமங்கலமான அருள் புரிந்த பதியும், உலகங்கள் அனைத்தையும் படைத்தருளும் பதியும், காத்தருளும் பசுபதியும், எவ்வுயிர்க்கும் வேறாகாமல் அவற்றின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கலந்திருந்து திருவருள் ஞானமாகிய செங்கோல் நடத்தும் அதிபதியுமாவர்; அதனால் என்னுடைய தன்மையைப் போலப் பிற மகளிர் இயல்பையும் ஒப்பாக எண்ணுதல் வேண்டா; பிறர்க்கு என் பதியாகிய சிவனிடத்து அன்பில்லை; அன்பு உடையவராயின் அவரை என்போல் எண்ணுக. எ.று.

     என்னை மணந்தபதி, சிற்சபைக்குத் தனிப் பதி, கனக சபாபதி, தேவ மகளிர்க்குப் பதி, உலகு படைத்த பதி, அதனைக் காக்கும் பசுபதி, அருள் செங்கோல் செலுத்துகின்ற அதிபதி என இயைக்க. அருள் ஞான ஒளி விளங்கும் ஞான சபையை, “கனிதரு சிற்சபை” என்று குறிக்கின்றாள். கனக சபாபதி - பொற் சபைக்குத் தலைவர். அமரர்களைச் சாகாமல் காத்தருளி அவருடைய மனைவியரின் மங்கல நாண் நீங்காதபடிப் பாதுகாத்தமை விளங்க, “வான் பன்னியருக்கு அருள்புரிந்த பதி” என்று பகர்கின்றாள். பிரமனாய் உலகங்களைப் படைத்தும் திருமாலாய் அவற்றைக் காத்தும் உயிர்களைக் கெடாதபடி ஆதரித்தும் ஓம்புதலால், “உலகமெலாம் படைத்த பதி” என்றும், “காத்தருளும் பசுபதி” என்றும் புகழ்கின்றாள். உயிரறிவுக்கு உள்ளறிவாய் அருள் புரிவதுபற்றி, “அகத்தும் புறத்தும் அகப் புறத்தும் அருட் செங்கோல் செலுத்துகின்ற அதிபதி” என்று அறிவிக்கின்றாள். திருவருட் சிவ ஞானத்தை இங்கே அருட் செங்கோல் என்று உருவகஞ் செய்கின்றார். பிற மகளிரும் என் போல் சிவன்பால் அன்புடையவராயின் அவர்களை என்னோடு சேர்த்து எண்ணுக என்பது கருத்து.

     (40)