5754. எண்ணியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
இறுமாம்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல்மடவாய்
பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
மகனும் அலேன்அலியும் அலேன் இதுகுறித்தென் றறியே.
உரை: தோழி! என்னுடைய தன்மையும் பிற மகளிருடைய தன்மையை ஒத்ததாக எண்ண வேண்டா என்று முன்னே சொன்னேன்; அது நான் சிவநேசத்தால் இறுமாந்து சொன்னது என நினைக்க வேண்டாம்; நானோ எனின் எனக்குப் பதி என்று சொல்லிய சிவனுடைய பற்றல்லது வேறொரு பற்றும் கொண்டிலேன்; எனக்கு நண்பரும் மற்ற அயலவரும் என் பொருளும் எனது என நினைக்கும் உயிரும் உடலும் உணர்வும் அவ்வுணர்வால் பெறுகின்ற சுகமும் யாவும் திருச்சிற்றம்பலத்தின்கண் பொருந்தி இருத்தலாம்; ஆகவே நான் பெண்ணும் அல்ல, ஆணும் அல்ல, அலியும் அல்ல; எனது இயல்பு சிவத்தைக் குறித்ததாகும் என அறிவாயாக. எ.று.
என்னியல் - எனது தன்மை. இறுமாப்பு - செம்மாப்பு; செருக்குமாம். சிவ நேசத்தால் சிவத் தொண்டர்களுக்கு உளதாகும் சிவ போகச் செருக்கு என்றும் கூறலாம். “இறுமாந்திருப்பன் கொலோ ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச் சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ” என்று பெரியோர் கூறுவது காண்க. மடவாய் - இளமை பொருந்திய தோழியே. பன்னுதல் - சொல்லுதல். முன்னுதல் - நினைத்தல். மன்னியது - நிலைத்துளது. சிவமாம் தன்மை எய்திய உயிர்க்குப் பால் வேற்றுமை இல்லாமையால், “நான் பெண்மகளும் அலேன் வரும் ஆண்மகனும் அலேன் அலியும் அலேன்” என்று கூறுகின்றாள். (41)
|