5755. பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
ஆர்தருபேர் அன்பொன்றே குறித்தருளு கின்றார்
ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
உரை: தோழி! நிலம் முதலாகப் பரநாத தத்துவம் ஆகிய இடங்களைக் கடந்து அவற்றிற்கு அப்பாலும் நற்பான்மையை யுடைய தனது அருட் செங்கோல் விளங்குமாறு இயலுகின்ற தனது சிறப்பைத் தெரிந்த பெரியோர்கள் வழிபடும் வழிபாட்டிற்கோ எனது அருள் திருவாளராகிய சிவபெருமான் அருள் புரிகின்றது என்றால் அஃதன்று; மனமுருகி நிறைந்து செய்யும் மிக்க அன்பொன்றையே அவர் தமது திருவுள்ளத்தைக் கொண்டருளுகின்றார் என்றறிக; ஆதலால் அவரிடத்தே உண்மை யன்புடையவர் எல்லாரும் எனக்கு உணரப்படுகின்ற உறவினராவார்கள்; இது உண்மை. அவரிடத்து அன்பு மறவாமை கருதியே நீயும் எனக்கு உறவாயினை. எ.று.
நிலம் முதல் நாத தத்துவம் ஈறாக உள்ள தத்துவங்கட்கு அப்பாலுள்ள தத்துவாதீதத்தை, “பார் முதலாப் பரநாதப் பதி” என்று பகர்கின்றாள். உண்மை யன்பு நிறைந்துள்ள இடத்தில் இறைவனது அருட் செங்கோல் நடப்பது பற்றி, “பாங்குடைய தனிச் செங்கோல்” என்று தெரிவிக்கின்றாள். தன் புகழ் தெரிந்து ஓதி வழிபடுவார்க்கு அவ்வழிபாட்டளவாய் நிற்பதன்று அவருடைய திருவருள் என்பாளாய், “ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று” என்றும், அவனது அருள் முழுதும் அன்புடையாருடைய அன்பொன்றையே குறித்து நிற்பதாம் என்பாளாய், “ஆர்தரு பேரன்பு ஒன்றே குறித்தருளுகின்றார்” என்றும் தெரிவிக்கின்றாள். அவரிடத்து அன்புடையார் எல்லாரும் எனக்கு உறவினராம் என அறுதியிட்டு உரைக்கின்றாளாதலால், “நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே” என மொழிகின்றாள். (42)
|