5756. நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
உரை: தோழி! நாதாந்த அளவும் எங்கள் நாயகனாகிய சிவனுடைய அருட் செங்கோல் நடக்கின்றது என்று சிலர் சொல்லுகின்றார்கள்; நாதாந்த மட்டுமன்று போதாந்த நிலையிலும் உயர்ந்த யோகாந்த நிலையிலும் தூயதான கலாந்த நிலையிலும் அச் செங்கோல் பரந்துளது என்று வேறு சிலர் கூறுகின்றார்கள்; அஃது உண்மை யன்று; சொல்லப்படுகின்ற வேதாந்த வெளியிலும் அதனின் மிக்க சித்தாந்த வெளியிலும் இவற்றிற்கு அப்பாலும் அதன் மேல் அப்பாலும் வாதிக்கின்றவர் வாதை எல்லைக்கு அப்பாலும் அதற்கப்பாலும் அம்பலத் தாடுகின்ற சிவனது அருட் செங்கோல் சென்று பரந்துளது என அறிவாயாக. எ.று.
நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என வரும் பல அந்தங்களைக் காட்டி இவற்றின் பரப்பெல்லையில் சிவனது அருட் செங்கோல் செல்லுகின்றது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். அவற்றோடு மட்டுமன்று, வேதாந்த நூல்கள் கூறும் வெளியிலும் சித்தாந்த நூல்கள் கூறும் வெளியிலும் மேற்கொண்டு தார்க்கிகர் கூறும் வெளியிலும் அதற்கு அப்பாலும் அப்பாலுக்கப்பாலும் சிவனது அருட் செங்கோல் சென்று பரந்து நிலவுகிறது என அறிக என்பது கருத்து. போதாந்தம் என்பது ஞான நூல்கள் கூறும் ஞானாதீத நிலை. கலாந்த பதி என்பது நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தி அதிதை என்ற ஐவகைக் கலைகளிலும் உள்ள புவனங்களின் அதீத நிலை. வாதாந்தம் என்பது தருக்கமே பொருளாகக் கொண்ட வாதிகள் கூறும் தத்துவாதீத நிலை. (43)
|