5757.

     புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
          பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
     எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
          இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
     பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தாடுஞ் சபையைப்
          பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
     அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
          ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.

உரை:

     தோழி! புண்ணிய மூர்த்தியும் என்னுடைய உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் தலைவருமாகிய சிவபெருமான் அம்பலத்தின்கண் ஒளி விளங்க நடிக்கின்ற திருநடனத்தின் கூறுபாட்டினை நான் நினைத்த பொழுது நினைக்குந்தோறும் இன்ப அமுதுண்டு பசி நீங்கி இருக்கின்றேனாக; நீ என்னை அடிக்கடி உண்ண அழைக்கின்றாய்; அழகிய என்னுடைய ஒப்பற்ற கணவர் நின்று கூத்தாடுகின்ற ஞான சபையைப் பார்த்தாலும் பசி போய்விடும்; பார்ப்பதே அன்றி அதனை நெருங்கினாலும் அத்திருச்சபையை நினைத்தாலும் பசி வெம்மை தீர்ந்துவிடும்; சிவானந்தமாகிய அமுதம் சிந்தையின்கண் ஊறி நிறைந்துவிடும் என அறிக. எ.று.

     பொது என்பது ஞான சபையாதலால் அங்கே ஞான ஒளி விளங்குவது புலப்பட, “பொது விளங்க நடிக்கின்ற திருக்கூத்து” என்று தலைவி புகல்கின்றாள். படைத்தல் முதலிய ஐவகைத் திறங்களை உடையதாதலால், “திருக்கூத்தின் திறத்தை” என்று சிறப்பிக்கின்றாள். சிந்திக்குந்தோறும் சிந்தையின்கண் சிவானந்தமாகிய தேன் ஊறிப் பெருகுவது பற்றி, “நான் எண்ணுதொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன்” என்று கூறுகின்றாள். பண்ணுதல் - அழகு செய்தல். அண்ணுதல் - நெருங்குதல். வேசாறல் என்பது பசியினால் உளதாகும் விசன வெம்மை; இது வேசறவு எனவும் வழங்கும்.

     (44)