5758. கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகிர் அண்டத்
திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
உரை: தோழி! நமக்குக் கூச்சம் எதற்கு; ஞான சபையின்கண் கூத்தாடும் சிவபெருமானுக்கு நான் மணமாலையிட்டேன் என்று என்னை இகழ்கின்றவர் யாவர்; அண்டங்களிலும் அவற்றிற்கு மேல் உள்ள அண்டங்களிலும் இருந்தருளுகின்ற சத்திமான்களும் சத்தி வகைகளும் மற்றும் உள்ளவர்களும் தங்களுக்குள் பேசுகின்ற பேச்செல்லாம் வள்ளலாகிய சிவனுடைய அருள் நடனத்தின் பெருமையே தவிர வேறொன்றும் இல்லை; மேலும் வேதங்களும் ஆகமங்களும் மிக்கு ஒளி வீசுகின்ற அருட் பெருஞ்சோதி ஆண்டவனது திருக்கூத்தின் சிறப்புக்களையே பெரிதும் ஓதுகின்றன என அறிக. எ.று.
நான் அம்பலவாணருக்கு அன்பு மாலை இட்டேனாக அதுபற்றி நான் நாணம் அடைவதற்கு இடமில்லை என்பாளாய், “கூசுகின்றது என்னடி” என்று தலைவி கூறுகின்றாள். ஏசுதல் - இகழ்தல். சத்தியையுடைய தேவர்களைச் “சத்தர்” என்று குறிக்கின்றாள். எல்லா அண்டங்களிலும் உள்ள சத்தி சத்திமான்களும் பிற உயிர்களும் நாம் வாழும் உலகிலுள்ள வேதங்களும் ஆகமங்களும் அம்பலவாணருடைய திருக்கூத்தின் பெருமையையே போற்றிப் புகழ்கின்றன என்பது கருத்து. (45)
|