5759.

     குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
          கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
     புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
          புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
     அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
          அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
     விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
          மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.

உரை:

     தோழி! குலம் அறியப்படாதவரும் பிறந்த இடம் அறியப்படாதவருமாய் அம்பலத்தின்கண் நடித்தருளும் தலைவராகிய கூத்தப்பெருமானுக்கு மணமாலையைச் சூட்டினாய் என்று அறிவறியாதவரைப் போல் நீயும் புகலுகின்றாய்; பலவற்றைப் பலப்படச் சொல்லி விரியப் பேசுகின்ற எல்லாவற்றையும் கைவிட்டு நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; அளவில்லாத திருநடனத்தை என் கணவராகிய சிவன் செய்யாதொழிவாராயின், பிரமன் திருமால் முதலாகிய ஐவர்களும் மற்றவர்களும் நீக்க முடியாத உயிர்கள் பலவும் நீயும் இவ்வுலகில் இருந்தும் வாழ்வதும் வீழ்வதும் இல்லாதொழியும் காண். எ.று.

     குலம், தேவகுலம், மனித குலம், உயர் குலம், கீழ்க் குலம் என வரும் குல வேறுபாடுகள் சிவனுக்கு இல்லையாதலால், “குலமறியார்” என்றும், பிறந்த இடத்தை அறிய முடியாமை பற்றி, “புலமறியார்” என்றும் சிவனைத் தோழி கூறுகின்றாள். இரண்டாவதாகிய புலம், நல்லறிவு குறித்து நின்றது. அலகறியாத் திருக்கூத்து - அளவிட முடியாத கூத்து வகைகள். அரன் முதலாம் ஐவர்கள் என்றது, அயன், திருமால், அரன், சதாசிவன், மகேசன் என்ற ஐவர்களையுமாம். விலகறியா உயிர்கள் என்றது எண்ண முடியாத அளவிறந்த உயிர்களை என அறிக. வாழ்வும் வீழ்வும் ஒன்றும் இல்லையாம் என்பதற்குக் குறிப்பு மொழியில், “மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்து விடும் காணே” என்று விளம்புகின்றாள். ஒரு செயலும் இல்லையாம் என்பது குறிப்பு.

     (46)