5760. கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
பகிர்அண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.
உரை: கொடி போன்ற இடையையுடைய பெண்மகளாகிய தோழி! என்னுடைய கணவராகிய சிவபெருமானை அம்பலத்தின்கண் நடித்தருளும் கூத்தாடி என்று குறித்துரைக்கின்றாய்; மண்ணுலகத்தும் விண்ணுலகத்தும் பாதாளத்திலும் அண்டங்களிலும் அவற்றின் மேலுள்ள அண்டகோடிகளிலும் அவரது உண்மை ஒளி அவரது திருவடியை ஊன்றி நின்றாடும் திருக்கூத்தின் விளக்கமாகும்; இது முக்காலும் உண்மை என்று அரிய வேதங்களும் ஆகமங்களும் புகழ் உண்டாகப் பறையறைவது போலத் தெரிவிக்கின்றன; இது மனத்தின்கண் உள்ள வாட்டம் நீங்குமாறு நீ யாவரிடத்தும் கேட்டு அறிந்து கொள்வாயாக. எ.று.
கொடியிடைப் பெண் - பூங்கொடி போன்ற இடையையுடைய பெண் மகள். இளம் பெண் என்று தெரிதற்கு, “பேதாய்” என்று தலைவி தோழியை உரைக்கின்றாள். கொழுநர் - கணவர். படியிடம்-மண்ணுலகம். அண்ட அடுக்குகள் எண்ணிறந்தனவாகலின், “பகிரண்ட கோடி” என்று பகர்கின்றாள். பதி விளக்கம் - பதிப் பொருளாகிய பரம்பொருள் ஒன்று உண்டு என்னும் உண்மை நிலை. அம்பலத்தில் சிவபெருமான் திருக்கூத்தாடுவதால் அண்ட பகரண்டங்கள் யாவற்றிலும் மண் விண் பாதலம் முதலிய மூவகை உலகிலும் இறைவன் ஒருவன் உளன் என்ற உண்மை விளங்குகின்றது என்று வேதாகமங்கள் யாவும் விளம்புகின்றன என்பது கருத்து. கெடி - புகழ். பறை யறைதல் - பரையடித்துத் தெரிவிப்பது போலச் சொல்லித் திரிதல். அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று தோழி இகழ்ந்து பேசியதற்குக் காரணம் அவளது மனக்குறையாகும்; அது தீர்ந்தாலன்றிச் சிவனை இகழ்தலைக் கைவிட மாட்டாள் என்ற எண்ணத்தால், “வாட்ட மெலாம் தவிர்ந்தே” என்று தலைவி தோழிக்கு உரைக்கின்றாள் என அறிக. (47)
|