5761. இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
அம்பலத்தே நடம்புரியும் ஐயாவரு கின்றார்
என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
உரை: தோழி! இன்ப வடிவம் தருதற்குரிய சிவபெருமான் என்பால் வருகின்றார் என்றும், எல்லாம் செயல் வல்ல பரம ஞானியாகிய எம்பெருமான் இங்கே எழுந்தருளுகின்றார் என்றும், மெய்யன்பர் உள்ளமெலாம் இனிக்கச் செய்யும் ஞான வமுதத்தைத் தருபவர் வருகின்றார் என்றும், அம்பலத்தில் திருக்கூத்தாடி அருளும் தலைவராகிய சிவபெருமான் வந்தருளுகின்றார் என்றும், எலும்புகளாலாகிய நம்முடைய உடம்பை ஞானப் பொன்னுருவாக்க வந்தருளுகின்றார் என்றும், திருச்சின்னங்கள் ஓதி ஒலிக்கின்றனவாதலால் துன்பம் நீங்க ஒலிக்கின்ற அத் திருச்சின்ன ஒலியை என்னுடன் கலந்து சிவபோகம் பெறல் வேண்டிக் காதாரக் கேட்பாயாக. எ.று.
இன்ப வடிவினர் என்பது பற்றியும் தன்னைக் கண்டு மகிழ்வாரை இன்ப வடிவினர் ஆக்குபவர் என்றும் பெரியோர்கள் கூறுவதால், “இன்ப வடிவம் தருதற்கு இறைவன் வருகின்றார்” என்று தலைவி கூறுகின்றாள். வரம்பில் ஆற்றல் உடையவர் என்று சிவாகமங்கள் பாராட்டுவதால் சிவனை, “எல்லாம் செய்வல்ல சித்தர்” என்று செப்புகின்றாள். சித்தர் - தொண்டருடைய சித்தத்தில் எழுந்தருளும் பரம ஞானி. அமுதர் - ஞான அமுதம் சுரந்தருளுபவர். என்பு தோல் போர்த்த மக்கள் சிவஞானத்தால் சிவயோகம் பெறுவாராயின் அவனது திருமேனி சிவத்தின் பொன் வண்ணத் திருமேனியை எய்தும் என்பது சிவஞானிகளின் திருவாக்காதலால், “என்புருப் பொன் உருவாக்க எண்ணி வருகின்றார்” என்றும், திருச்சின்னங்கள் ஒலிக்கின்றன என்பாளாய், “திருநாத ஒலி இசைக்கின்றது அம்மா” என்றும் இயம்புகின்றாள். அவ்வழகிய ஒலியை நீ காதொன்றிக் கேட்பாயாயின் உன்னுடைய பிறவித் துன்பங்கள் நீங்கும் என்றும், சிவபோகானந்தத்தை பெற்று இன்புறுவாய் என்றும் தோழிக்குக் கூறுபவள், “துன்பமறத் திருச்சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி” என்று தலைவி மொழிகின்றாள். தன்னையும் அவ்வொலி இன்பத்தில் ஈடுபடுவித்தல் வேண்டி, “எனைச் சூழ்ந்தே” என்று எடுத்துரைக்கின்றாள். (48)
|