5762. துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
உரை: என்னோடு ஒத்த உரிமை யுடைய தோழியே! துரிய பதம் கடந்து அதற்கு அதீதத்தே விளங்குகின்ற பெருஞ் சோதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் என்பால் வருகின்றார் என்றும், சிவபோக சுக வடிவத்தை எனக்குத் தருதற்கு என் உயிர்க்குத் துணைவராகிய பரமசிவன் வருகின்றார் என்றும், பெருமை பொருந்திய பிரமன் முதலிய தேவர்களுக்கும் காண்பதற்கருமை வாய்ந்தவராகிய சிவபெருமான் வருகின்றார் என்றும், பித்தர் என்று வேதங்கள் புகன்றோதும் ஞான மூர்த்தி வருகின்றார் என்றும், நீங்குதல் இல்லாத ஞானசபையில் நடம் புரியும் கூத்தப்பெருமான் வந்தருளுகின்றார் என்றும் திருச்சின்னங்களின் இனிய ஓசை இசைக்கின்றது காண்பாயாக; எனக்குத் தோழியாகிய நீயும் உன் மனத்துயர் நீங்குமாறு இங்கே இருந்து அத் திருச்சின்ன ஒலிகளைக் கேட்டு மகிழ்வாயாக. எ.று.
தலைவிக்குரிய உரிமை அனைத்தும் தோழிக்கும் உரியது என அகப்பொருள் நூல்கள் கூறுதலால், “உரிமை பெறும் என் தோழி” என்று உரைக்கின்றாள். துரிய பதம் என்பது துரியாவத்தைக்குரிய ஞான நிலை; அதனை உந்தித்தானம் என்பர். யோகக் காட்சியில் துரிய பதத்தில் பெரிய சோதி வடிவாய் சிவம் தோன்றுவது பற்றி, “பெருஞ் சோதி” என்று குறிக்கின்றாள். சுக வடிவம் - சிவானந்த ஞான வடிவம். பிரமாதியர் - அயன், அரி, அரன் முதலிய தேவர்கள். சித்தர் - சிந்திப்பார் சிந்தனையில் எழுந்தருளும் ஞான மூர்த்தி. இரிவகல் சிற்சபை - நீக்க மில்லாத ஞான சபை. உளவாட்டம் - மனக்கவலை. (49)
|