5763. ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழி.
உரை: தோழி! சர்வேசுவரனும் என் உயிர்க்குத் தலைவரும் ஆகிய சிவபெருமான் வருகின்றாராதலால் நீங்கள் யாவரும் வெளியே இருப்பீர்களாக என்று நான் சொல்லுகிறேன். ஆனால் வருத்தமின்றாக நான் உள்ளே இருந்தால் என்னாம் எனக் கேட்கின்றாய்; என் கணவர் இங்கே எழுந்தருளுவாராயின் அவர் ஆசனத்தில் இருந்தருளும் முன்பே ஆசைமிகுதியால் வெட்கம் நோக்காமல் நான் அவரைத் தழுவி அணைத்து மகிழ்வேன்; அது கண்டால் உன் போன்ற பிற மகளிர் வியப்புற்று முகம் சுளித்து இவள் வெட்கமில்லாதவள் என்று தம்முள் பேசி என்னை இகழ்வர்! அதனால் நான் உங்களைப் புறத்தே இருமின் என்று உரைத்தேனே அன்றி வேறு எனக்குக் கருத்தில்லை என அறிக என்று தலைவி உரைக்கின்றாள். எ.று.
ஈசர் - அருட் செல்வர். உண்மை அறிவு தந்து வாழச் செய்தலின் சிவனை, “உயிர்த் தலைவன்” என்று உரைக்கின்றாள். ஏசறவு - வருத்தம். ஆசை வெட்கம் அறியாது - ஆசை மிக்கவர் நாணத்தை நோக்க மாட்டார். ஆதலால், “ஆசை வெட்கம் அறியாது” என்று கூறுகிறாள். ஒரு இளம் பெண் ஒரு ஆடவனைக் கண்டு மகிழ்ந்து தழுவி அணைத்துக் கொள்வாளாயின் அது கண்டார் நாணத் தக்கதாகலின், “ஆசை வெட்கம் அறியாது” என்று அதனை வற்புறுத்துகின்றாள். நொடித்தல் - பேசுதல்; ஈண்டு நாணத்தால் முகம் சுளித்துப் பேசுவதன் மேற்று. கூசு - வெட்கம். (50)
|