5764. அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
உரை: தோழி! அருளரசராகிய சிவபெருமான் வருகிறார் என்று தெரிவிக்கின்றேன்; நீ சிறிதும் ஐயம் கொள்ளாமல் நான் சொல்வதை மனமொன்றிக் கேட்பாயாக; முரசொலியும் சங்கு வீணை முதலியவற்றின் நாத ஒலியும் மிகுதியாக முழங்குகிறது காண்பாயாக; அவருடைய திருமேனியில் கமழும் தெய்வ மணம் எங்கும் கலந்து வீசுகிறது; அதனை உனது மூக்கினால் மோந்து அறிந்து கொள்க; வீதிகள் எங்கும் அவருடைய அருட் சோதி ஒளிர்வதைக் காண்பாயாக; நாம் அவர் திருவடியைப் பரவி எதிர்கொள்ள வேண்டுதலால் நீ கற்பூர விளக்கை அன்புடன் எடுத்துக்கொண்டு முறை தெரிந்து மகிழ்வுடன் என்னை அடுத்து உடன் வருவாயாக. எ.று.
உயர்வற உயர்ந்த அருட் செல்வம் உடையவராதலால் சிவ பெருமானை, “அருளரசு” என்று குறிக்கின்றாள். மனதைப் பொறிகளின் வழியாக அலையவிடாமல் ஒன்றிக் கேள் என்பாளாய், “நீதான் ஐயமுறேல் அசையாது உற்றுக் கேள்” என்று உரைக்கின்றாள். தனது காதில் சிவனது வரவு குறிக்கும் வாத்திய முழக்கங்களைக் கேட்டு மகிழ்கின்றவள், “முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது” என்று மொழிகின்றாள். சிவனது திருமேனியின்கண் எழும் தெய்வமணம் எல்லாவிடத்திலும் பரவி நுண்ணிதாய்க் கமழ்தலால், “திருமேனி வழங்கு தெய்வ மணம் எங்கும் விரச வீசுவது நாசி உயிர்த்து அறிக” என்று நவில்கின்றாள். விரசுதல் - பரவுதல். உயிர்த்தறிதல்-
மோந்துணர்தல். பரசுதல் - வணங்கி வழிபடுதல். தலைவிக்குப் பக்கத்திலும் பின்னேயும் வருவது தோழிக்கு முறையாதலால், “தெரிந்தடுத்து மகிழ்ந்து என்னுடன் வருக” என உரைக்கின்றாள். (51)
|