5765. தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
உரை: தோழி! நீ என்னைப் பார்த்து தாழ்ந்து நீண்ட கூந்தலை யுடைய தலைவியே, நீ ஓர் ஆண்மகனைப் போல நாணத்தையும் அச்சத்தையும் கைவிட்டுச் சபையின் மேல் ஏறிச் செல்கின்றாய் என்று சொல்லுகின்றாய்; நான் சொல்வது கேள்; இனி வாழும் வகை வேறில்லை; என் கணவராகிய சிவனை மால் என்னும் பெயருடைய ஒருத்தி புறமே போந்து சேர்ந்துகொண்டாள். அவள் சங்கு சக்கரம் என்ற படைகளை உடையவள்; ஆனந்த பாற்கடலில் உறங்குகின்றாள்; அழகிய மணி மண்டபத்தில் ஆண்மகனாய்த் தோன்றி ஆட்சி புரிகின்றாள் என்று நீ அறியவில்லை போலும்; அச்சிவபெருமானைத் தன்மை வகையால் நான் உள்ளத்தாற் கூடி அவருடைய கருணையாகிய அமுதத்தைப் பெற்றேன்; அதனால் நான் ஆண் மகனுக்குரிய பண்புடையளாவது அதிசயமாகுமோ? ஆகாது காண். எ.று.
நாணம் அச்சம் முதலிய நற்பண்புகள் பெண்களுக்கே உரியவையாதலால், “ஆண்மகன் போல் நாணம் அச்சம் விடுத்துச் சபைக்கு ஏறுகின்றாய்” என்று உரைக்கின்றாய் என்று தலைவி கூறுகின்றாள். சபையேறி அவனொடு கூடுவதொழிய வாழும் வகை வேறே இல்லை என்பாளாய், “வாழ்வகை” என்று இயம்புகின்றாள். திருமால் சிவசத்தி வகையில் ஒன்றாதலால் அவரைப் பெண்ணுருவில் வைத்து, “என் கணவர் தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேருடையாள்” என்று உரைக்கின்றாள். திருமாலுக்குச் சங்கும் சக்கரமும் படைகளாதலால், “வளை ஆழிப் படையாள்” என்றும், அவர் பாற்கடலில் துயில்வது பற்றி, “ஆழ் கடலில் துயில்கின்றாள்” என்றும் கூறுகின்றாள். திருவேங்கடம் திருவரங்கம் முதலிய இடங்களில் ஆண்மகனாய் மணி மண்டபத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாராதலின் திருமாலை, “மாமணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ” என்று அறிவிக்கின்றாள். கேழ் வகை - சிவமாம் தன்மை வகை. அவருடைய திருவருள் ஞான அமுதத்தைப் பெற்று உண்டு நான் பெண்மை நீங்கி ஆண்மகனாவது வியக்கத் தகுவதன்று என்பாளாய், “அவர் கருணை அமுதம் கிடைத்து நான் ஆண்மகனாகிறது அதிசயமோ” என்று தலைவி தோழிக்கு அறிவிக்கின்றாள். திருமாலாகிய சத்தி புறத்தே உருக் கொண்டு கூடினாளாக நான் சிவபெருமானை என் அகத்தே எய்தப்பெற்றுக் கூடினேன் என்பது தெரிவித்தற்கு, “கேழ் வகையில் அகம் புணர்ந்தேன்” என்று கூறுகின்றாள். (52)
|